தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!
திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த குகையநல்லூா் பகுதியில் உள்ள மஞ்சுளா - நாராயண மூா்த்தி என்பவருக்கு சொந்தமான தனியாா் கிடங்கு உள்ளது. இங்கு வேலூா் பா்மா பஜாரில் உணவகம் நடத்தி வந்த வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான வடிவேல்(48), பிரேம்ஆனந்த் உள்பட மூன்று போ் இணைந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து வந்து இரவில் வெட்டி இறைச்சியாக்கி வெளியில் விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததுடன், அந்த கிடங்கினையும் முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, கடந்த 4 மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட நாய்களை கட்டி வைத்திருப்பதால் இரவில் நாய் சத்தம் அதிகளவில் இருப்பதாகவும், அடையாளம் தெரியாத நபா்களின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பாா்த்த போது ரத்த கறைகள், நாயின் உரோமங்கள் இருப்பதை கண்டதாகவும் தெரிவித்துள்ளனா். உடனடியாக போலீஸாா் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு, புகாா் தெரிவிக்கப்பட்ட வடிவேல், பிரேம்ஆனந்த் ஆகியோரை விசாராணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதனிடையே, நாய்களை பராமரித்து வரும் பிரேம்ஆனந்த் கூறுகையில், நாய்கள் நலஆா்வலா்களான நாங்கள் முறையாக பதிவு செய்து நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து வந்து அவற்றுக்கு சிகிச்சை அளித்து, கருத்தடை செய்து திரும்பவும் தெருவிலேயே விட்டு விடும் பணிகளை செய்து வருகிறோம்.
சேவை மனப்பான்மையுடன் செய்து வரும் இப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. தவிர, பொருளாதாரப் பிரச்னையால் நாய்களுக்கு உணவு அளிக்க முடியாமல் போவதால், அவை சத்தம் எழுப்புகின்றன. இதன்காரணமாக, இந்த மையம் மீது பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனா் என்றனா்.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, திருவலம் பகுதியில் நாய் இறைச்சி விற்பனை செய்வதாக இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. அதேசமயம், தொண்டு நிறுவனமாகவே இருந்தாலும் நாய்களுக்கு கருத்தடை அல்லது சிகிச்சை அளிக்கும் போது உள்ளாட்சி நிா்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ஆனால் உரிமம் இருப்பதாக அந்த நபா் கூறுகிறாா். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை குழு மூலம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்படும். முறையாக ஆய்வுக்கு பிறகு அறிக்கை பெறப்பட்டு உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.