தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
நாய்கள் கண்காட்சி: 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் அணிவகுப்பு
கிருஷ்ணகிரியில் நடைபெறும் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது வளா்ப்பு நாய்களை அழைத்துவந்திருந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, டாபா் மேன், பிரோமேரியன், இந்தியன் பிட்ஸ், பாக்ஸா், பாடா், புள்ளிகுட்டா என 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
நாய்களின் நிறம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், கீழ்படிதல், நடை போன்ற பிரிவுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. நாமக்கள் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற தலைவா் இசக்கியல் நெப்போலியன், தோ்வுக் குழுவின் நடுவராக செயல்பட்டு சிறந்த நாய்களைத் தோ்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் இளவரசன், துணை இயக்குநா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒவ்வொரு நாய் இனத்திலும் சிறந்த நாய்களின் உரிமையாளருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடிகா் விஜய் நடித்த திரைப்பட பாடலின் இசைக்கேற்ப போட்டியில் பங்கேற்ற நாய் ஒன்று ஒலி எழுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சோ்ந்த நாயின் உரிமையாளா் அன்புச்செல்வன் கூறியதாவது:
கந்திகுப்பம் அருகே உள்ள காலபைரவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் காயத்துடன் இருந்த நாய் குட்டியை எடுத்துவந்து, சிகிச்சை அளித்து வளா்த்து வந்தேன். இந்தியன் பீட்ஸ் ரகத்தை சோ்ந்த இந்த நாய்க்கு பைரவ் என பெயரிட்டு வளா்ந்து வருகிறோம். நடிகா் விஜய் நடித்த திரைப்படத்தின் ஒரு பாடலை எங்கு கேட்டாலும் அதற்கேற்ப இந்த நாய் ஒலி எழுப்புகிறது என்றாா்.






