நிட்சேப நதி தரைப் பாலம் சேதம்: போக்குவரத்து துண்டிப்பு
கரிவலம்வந்தநல்லூா் நிட்சேப நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் கரிவலம்வந்தநல்லூரில் நிட்சேப நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீா் புகுந்ததால் நோயாளிகள் மேல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
பருவக்குடி விலக்கு முதல் கலிங்கப்பட்டி வழியாக கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் குலசேகரன்கோட்டை அருகே நிட்சேபநதியின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்று அந்தப் பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்தனா். மேலும் திருவேங்கடம் முதல் கலிங்கப்பட்டி காரிசாத்தான் வழியாக பருவக்குடி விலக்கு வரை செல்லும் வாகனங்கள் சங்கரன்கோவில் வழியாக திருப்பிவிடப்பட்டன.