Mrunal Thakur: "பச்சை நிறமே பச்சை நிறமே" - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல...
"நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன" - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ``அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders - FEO)' என அறிவித்துள்ளது.

இந்தத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளனர். இதில் அசல் தொகை ரூ.26,645 கோடி. வட்டி (அக்டோபர் 31, 2025 வரை) ரூ.31,437 கோடி. இந்தக் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை மீட்கப்பட்ட தொகை ரூ.19,187 கோடி.
இன்னும் மீட்க வேண்டிய தொகை ரூ.38.895 கோடி. தப்பியோடிய 15 குற்றவாளிகளில், 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பல உயர்மட்ட பெயர்கள் அடங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் மால்யா, தற்போது செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக இந்திய பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த இரண்டு மோசடிகளும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்திய சட்டத்தின் செயல்முறைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுக்க 2018-ம் ஆண்டும் FEO சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் மோசடி தொடர்புடைய தொகை, ரூ.100 கோடியைத் தாண்டும்போது அவர்களின் எல்லா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும், இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும், சிவில் வழக்குகளில் எந்த உரிமையும் வழங்கப்படாது.
இந்தப் பட்டியலில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.
விஜய் மல்லையா
நீரவ் மோடி
நிதின் ஜே சந்தேசரா
சேதன் ஜே சந்தேசரா
தீப்தி சி சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் மோசடி)
சுதர்ஷன் வெங்கட்ராமன்
ராமானுஜம் சேஷரத்னம்
புஷ்பேஷ் குமார் பைத் (சைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட்)
ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல்

இந்த மோசடியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், கடந்த வாரம், ஸ்டெர்லிங் பயோடெக் வங்கி மோசடி வழக்கில் சந்தேசரா சகோதரர்கள் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கடன் வழங்கிய வங்கிகளுக்கு முழு மற்றும் இறுதித் தொகையாக ரூ.5,100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான தகவல் வெளியானதும் விஜய் மல்லையா தன் எக்ஸ் பக்கத்தில், ``எவ்வளவு காலம் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னையும் பொதுமக்களையும் ஏமாற்றப் போகின்றன? நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், என்னிடமிருந்து ரூ.14,100 கோடி மீட்டதாகச் சொல்கிறார். ஆனால் வங்கிகள், ரூ.10,000 கோடி மட்டுமே மீட்டதாகக் கூறுகின்றன. அந்த ரூ.4,000 கோடி வித்தியாசம் ஏன்?

இப்போது, நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், நான் இன்னும் ரூ.10,000 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார். ஆனால் வங்கிகள், நான் ரூ.7,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது என்கின்றன. ஆனால், மீட்ட தொகைகளுக்கான கணக்கு அறிக்கை அல்லது கிரெடிட் பதிவு எதுவும் இல்லை.
என் தீர்ப்பின் அடிப்படையில் கடன் ரூ.6,203 கோடிதான். ஆனால் இப்போது அரசு, வங்கிகள் எல்லோரும் வேறு வேறு எண்களைச் சொல்கிறார்கள். எனவே, உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இது என்னைச் சார்ந்த நிலையில் மிகவும் பரிதாபகரமான சூழல்.
மேலும், நிதி அமைச்சரின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, என்னிடமிருந்து மொத்தமாக ரூ.15,094.93 கோடி மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது, 2024 டிசம்பரில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த தொகையை விட சுமார் ரூ.1,000 கோடி அதிகமாகும்.
ஆனால், இந்த வித்தியாசத்திற்கான விளக்கமோ அல்லது கணக்கு அறிக்கையோ எதுவும் வழங்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














