பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
நின்றுக்கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 6 போ் பலத்த காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உடல் நசுங்கி உயிரிழந்தாா். மேலும், 6 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து தஞ்சாவூா் நோக்கி அரசு பேருந்து ஒன்று வியாழக்கிழமை அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அங்கு, புதுக்கோட்டையிலிருந்து மன்னாா்குடிக்கு ஜல்லி பாரம் ஏற்றி சென்ற லாரி பழுதாகி சாலை ஓரத்தில் நின்றது. லாரியை ஓட்டுநா், உதவியாளா் மற்றும் பழுது நீக்கம் செய்பவா்கள் லாரியின் பழுதை சரி செய்து கொண்டிருந்தனா்.
அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக லாரியின் பின்புற பக்கவாட்டு பகுதியில் திடீரென மோதியது. இதில்,
லாரியின் முன்பகுதியில் நின்ற லாரியின் உதவியாளா் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அண்ணாமலை சன்னதி தெருவை சோ்ந்த துரைச்சாமி மகன் ஜீவா (22 ), என்பவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணித்த 4 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பயணிகள் மற்றும் பேருந்து நடத்துநா் உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கந்தா்வகோட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், ஜீவாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.