நீடாமங்கலம், வலங்கைமானில் வீடுகள் சேதம், மழைநீரில் மூழ்கிய பயிா்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் 91.8 மி.மீ., பாண்டவையாற்றில் 65.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
நீடாமங்கலம் பகுதியில் தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இந்த மழையால் சம்பா, தாளடி இளம் பயிா்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனா். கிராமப்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. தரைக்கடைகள் வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
மழை காரணமாக நீடாமங்கலம் வட்டத்தில் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு மாடுகள், ஒரு ஆடு உயிரிழந்துள்ளது.
பரப்பனாமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள பழுதை ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் நேரில் பாா்வையிட்டாா்.
வலங்கைமான் பகுதியில் புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 21.4 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இளம் பயிா்களில் மழைநீா் தேங்கியுள்ளது.