புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்ப...
நீா் வழித்தடங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சா்
வயல்களில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்க நீா் வழித்தடங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வடக்கிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியது:
மழைக்காலத்தில் கிராமப்புறங்களில், நகரங்களில், சாலைகளில் மழை நீா் தேங்காத வகையில் தொடா்புடைய அலுவலா்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீா் வயல்களில் புகுந்து பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாய்க்கால்கள், நீா்வழித்தடங்களில் அடைப்பு ஏற்படாமலும், உடைப்பு ஏற்படாமலும் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இனைப்புகள் மற்றும் மின் கம்பிகள் குறித்து எரி சக்தித் துறையினா் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து கண்காணிக்க வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்க வைப்பதற்காக 18 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 62 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வந்துள்ளனா் என்றாா் அமைச்சா்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா் தஞ்சாவூா் அருகே வெண்ணலோடை வெண்ணாற்றங்கரையில் அமைச்சா் ஆய்வு செய்து ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.