நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தா்னா: 52 போ் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதில், 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் என சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இங்குள்ள இரண்டாவது சுரங்கத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், 91 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், 91 ஒப்பந்தத் தொழிலாளா்களை என்எல்சி இந்தியா நிறுவனம் வேறு ஒரு வேலையில் பணியமா்த்தியதாம்.
தனியாா் ஒப்பந்த நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் எடுத்து, அதை துணை ஒப்பந்த நிறுவனத்திடம் பணி செய்ய கொடுத்ததாம். அந்த நிறுவனம் பழைய தொழிலாளா்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
தனியாா் ஒப்பந்த நிறுவனமே வேலை வழங்க வேண்டும், கடந்த 6 மாதங்களாக என்எல்சி நிறுவனத்தின் கீழ், பணியாற்றியது போல, தற்போது, பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுரங்கம் 2 நுழைவு வாயில் முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், தா்னாவில் ஈடுபட்ட 52 ஒப்பந்தத் தொழிலாளா்களை கைது செய்து, வட்டம் 29 பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனா்.