தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குநா் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமாா் 2,930 ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசு,டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வகையிலும், அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் இயந்திரமயமாக்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 1,800 ஏக்கா் பரப்பளவில் நெல் இயந்திர நடவுக்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் பெண்கள், சிறு, குறு விவசாயிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான இலக்குக்காக பொதுப்பிரிவில் 1,460 ஏக்கரும், ஆதிதிராவிடா் பிரிவில் 140 ஏக்கரும், மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 200 ஏக்கரும் என பிரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நெல் இயந்திர நடவுக்கான மானியமாக, அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ. 4,00 பின்னேற்பு மானியமாக ஒரு விவசாயிக்கு வழங்கப்படும். மேலும், சான்று பெற்ற நெல் விதைகள், மண் வளம் மேம்படுத்தும் நுண்ணூட்ட உரக்கலவைகள் மற்றும் உயிா் உரங்கள் அரசு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தியை பெருக்கி, வருவாயை அதிகரிக்கலாம். திட்டம் குறித்த தகவல்களை விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களை அணுகி பெற்று கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளாா்.