கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக்...
நெல்லை: `எவ்வளவு சொல்லியும் கேட்கலை...'- செல்போன் பேச்சால் ஆத்திரம்; அக்காவை கொன்ற தம்பி
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம், விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடுகளையும் பராமரித்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டான், சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரின் முதல் தம்பி ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராகவும், இரண்டாவது தம்பி முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து கேஷியராகவும் வேலைபார்த்து வருகின்றனர்.

சமீப காலமாக ராமலட்சுமி யாரிடமோ போனில் அடிக்கடி பேசி வருகிறார் என்பதை அறிந்த பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இது குறித்து மகன்களிடமும் சொல்ல இருவருமே கண்டித்துள்ளனர். இந்த நிலையில், ஊர்க்கோயில் திருவிழாவிற்காக ஹோட்டலில் விடுமுறை கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு பெற்றோர் இருவரும் வீட்டின் பின்புறம் தொழுவில் ஆடு, மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த ராமலட்சுமி தனியாகச் சென்று செல்போனில் ஆண் நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். இதனைக் கவனித்த முத்துகிருஷ்ணன், அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, ராமலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் துடித்துடித்து ராமலட்சுமி கீழே விழுந்தார். ராமலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் ராமலட்சுமியின் தாய், தந்தை இருவருமே கதறி அழுதனர். இதனையடுத்து, சுத்தமல்லி காவல் நிலைய போலீஸார், ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ராமலட்சுமி செல்போனில் பேசியதைக் கண்டித்ததால் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, முத்துகிருஷ்ணனை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், “அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்,

அவர் வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாகக் கேள்விப்பட்டு குடும்ப நிலைமையை எடுத்துச் சொல்லி கண்டித்தோம். ஆனால், அக்கா கேட்கவில்லை. பலமுறை சொல்லியும் நேற்று மீண்டும் நீண்ட நேரம் செல்போனில் பேசியதை கண்டித்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை. இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்தேன்” எனக் கூறி கொலைசெய்ததை ஒப்புக் கொண்டார். இது குறித்து சுத்தமல்லி காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















.jpeg)