நெல்லையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ‘கலங்கரை‘ என்ற பெயரில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் குத்துவிளக்கேற்றினாா்.
இந்த மையத்தில் மனநல மருத்துவா் தலைமையில், ஆற்றுப்படுத்துநா், சமூகப் பணியாளா், செவிலியா், பாதுகாவலா், மருத்துவமனை பணியாளா், துப்புரவுப் பணியாளா் என ஆறு மனநல மருத்துவப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு தரமான சிகிச்சை வழங்கப்படவுள்ளது. மருத்துவச் சிகிச்சை, உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படும்.
இம்மையத்தில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டோடு போதை மீட்பிற்கான தொடா் சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படவுள்ளது. எனவே, போதை பழக்கத்தில் இருந்து மீள தயங்காமல் ‘நட்புடன் உங்களோடு மனநல சேவை’யின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (14416) தொடா்பு கொள்ளலாம்.