பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீ...
`நேற்று மகாராஷ்டிரா.. இன்று டெல்லி..' ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரிக்கும் உரிமைத் தொகை!
மாகயுதி கூட்டணி வெற்றி...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது, என்.டி.ஏ கூட்டணி. தேர்தல் முடிவில் பா.ஜ.க 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) 41 இடங்களையும் வென்றிருக்கின்றன.
பாஜக தலைமையிலான மாகயுதி கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது, "பெண் சகோதரி திட்டத்தின்கீழ், பெண்களுக்கு ரூ.2,100 வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 நலநிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், 'மகாலட்சுமி திட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் அமல்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெற்றது.
நெருங்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
இந்தசூழலில்தான் விரைவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 'ஆளும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும்' என, கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், "ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று சொன்னோம். தற்போது இதற்கு முதல்வர் ஆதிஷி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆனால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் 15 நாள்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தற்சமயத்துக்கு இந்த உதவித்தொகையை வழங்க இயலாது. அதேநேரத்தில் இந்த உதவித் தொகை போதாது என பெண்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். விரைவில் இதேபோல் காங்கிரஸ், பா.ஜ.க-வும் உதவித்தொகை குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
`இனி உரிமைத் தொகை அதிகரிக்கும்..'
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தற்போது சட்டப்பேரவை தேர்தல்களில் உரிமைத் தொகை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் தி.மு.க கைப்பற்றியதற்கு ரூ.1,000 உரிமைத் தொகை கொடுத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மகாராஷ்டிராவில் வெற்றிபெற்றதற்கும் ஏற்கெனவே கொடுத்த உரிமைத் தொகைதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்தசூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மகளிருக்கு ரூ.1,500 வழங்க தி.மு.க-வும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ரூ.2,000 கொடுக்கிறார்கள். ஒருகாலத்தில் பா.ஜ.க இதை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது அவர்களும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வரும் காலங்களில் உரிமைத் தொகையில் கொடுக்கப்படும் தொகை அதிகரிக்கும்.
தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்பெறும்...
ஒருவேளை கொடுக்காமல் நிறுத்தினால் பாதிப்பு ஏற்படும். ஆனால், இதுபோன்ற விஷயங்களை ஏற்கெனவே கடனில் இருக்கும் மாநிலங்களில் மீண்டும், மீண்டும் செயல்படுத்தும்போது கடன் சுமை உயரும். அப்போது பெரும் பிரச்னைகள் ஏற்படும். அதேநேரத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசும் ரூ.6,000 வழங்கி வருகிறது. அதில் விவசாயிகளுக்கு கொடுக்கிறோம் என்கிற ஆறுதல் இருப்பதாக சொல்கிறார்கள். இதேபோல் பெண்களுக்கு கொடுப்பதும் அவர்களை சுயசார்பாக மாற்றும் நடவடிக்கை என்கிறார்கள். இப்படி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் எந்த கட்சி அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஒருகட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சிகளும் பணம் தருகிறார்கள், அதில் நமக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டுபோடுவோம் என மக்கள் முடிவு செய்வார்கள். எனவே தேர்தலின்போது உரிமைத்தொகை குறித்த வாக்குறுதிகள் இடம்பெறாமல் இருக்காது" என்றார்.