செய்திகள் :

நோய்கள் தீர்க்கும் தலம்...

post image

அயோத்தி அரசாண்ட சூரிய குல வேந்தன் சகரன், அஸ்வமேத யாகத்தை தொடங்கி, வேள்விக் குதிரையை ஒவ்வொரு நாடாக அனுப்பினான். "தனக்கு இது ஆபத்தாகுமோ?' என அஞ்சிய இந்திரன், வேள்விக்குதிரையை ஓட்டிச் சென்று பாதாள உலகில் கபில முனிவரின் தவக் குகையில் கட்டினார். குதிரையைத் தேடி தனது அறுபதாயிரம் புதல்வர்களை அனுப்பினான் சகரன்.

தவத்தில் ஆழ்ந்திருந்த கபிலரையும், அருகில் கட்டப்பட்டிருந்த குதிரையை கண்ட சகரனின் மகன்கள் உண்மையை அறியாது சண்டைக்குச் சென்றனர். இதனால் கோபம் கொண்ட கபிலர், தனது தவ வலிமையால் சகரனின் மகன்களைச் சாம்பலாக்கினார். மகன்களைத் தேட சகரன், பேரன் அம்சுமானை அனுப்பினான். கபிலரை அம்சுமான் சந்தித்து நடந்தவற்றை அறிந்தான். ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வந்து, அந்தப் புனித நீரால் சகரனின் மகன்களின் சாம்பலைக் கரைத்தால், அவர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைவார்கள் என்பதை அறிந்தான். கபிலரின் அனுமதியோடு யாகக் குதிரையை மீட்டு வந்து சகரனிடம் சேர்த்தான். வேள்வி நிறைவேறியது.

தொடர்ந்து கங்கையை பூமிக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய அம்சுமானும், அவரது வாரிசான திலீபனும் கடும் தவத்தைப் புரிந்தனர். அந்தப் பெரிய பணியை முடிக்க பகீரதன் முயன்றான். ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கி சிவன் பூமியில் ஓட விட்டார். பகீரதன் கங்கையை சகல மரியாதைகளுடன் அழைத்துச் சென்று பாதாள லோகத்தில் இருக்கும் தன் முன்னோர்களின் சாம்பலை புனித நீரில் கரையச் செய்தான். சகரனின் மகன்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர்.

அதற்கு பிறகு நீண்ட காலத்துக்குப் பிறகு ரகு வம்சத்தில் பகீரதன் தோன்றினார். சிவ பக்தரான இவர், முனிவரின் சாபத்தால் சாம்பலான தனது முன்னோர்கள் முக்தி அடைய கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்தார்.

கடமை முடிந்ததும், பகீரதன் அயோத்தியை அரசாளத் தொடங்கினான். இறைவழிபாட்டை மறந்து அரசவை ஆடல் அணங்குகளின் நடனத்தில் மூழ்கித் திளைத்து தன்னிலை மறந்தான். நாரதரின் வருகையைக் கூட கவனிக்கவில்லை. மிதமிஞ்சிய போகமும், அலட்சியமும் நாரதருக்கு கோபம் மூட்டியது. "பெண்களிடம் மோகம் கொண்டவனுக்கு மேகநோய் பீடிக்கட்டும்' என்று சாபமிட்டார். தவறை உணர்ந்து பதறிய பகீரதன், நாரதரிடம் வருத்தம் தெரிவித்து, சாபம் தீர வழி கேட்டான். "108 லிங்கங்களை நிறுவி வழிபட்டால் நோய் நீங்கும்'' என்றார். பகீரதன் 108-ஆவது லிங்கத்தை நிறுவ இடம் தேடிய போது சிவனே கனவில் வந்து, புரசவனத்தில் நிறுவ வழிகாட்டினார்.

புரசு வனப் பகுதியை அடைந்து, பெரிய புரச மரத்தின் கீழ் லிங்கப் பிரதிஷ்டையை பகீரதன் செய்தான். பகீரதன் சிவலிங்கத்தை நிறுவும் முன் அபிஷேக குளம் எடுத்து, கங்கையை வேண்ட அவள் குளத்தில் பிரசன்னமானாள். அவளை இக்குளத்தில் எப்போதும் வாசம் செய்ய வேண்டினான். அதனை ஏற்று கங்கை குளத்தில் குடி புக, அந்நீரெடுத்து நிறுவி நீராட்டம் செய்து வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றான். நோய் தீர்த்த சிவன், இந்த புரசு வனத்திலேயே "கங்காதரேசுவரர்' என்ற பெயரோடு கோயில் கொண்டார்.

சுந்தரர் தம் பதிகத்தில் இந்தக் கோயில் இறைவனைப் பாடியிருக்கிறார். தற்போதுள்ள கோயில் அமைப்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது.

கிழக்கு நோக்கிய கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி என அழகான ஆகம அமைப்புக்கு உள்பட்ட கோயிலாகும்.

கொடிமரமும் சிம்மமும் காட்சி தருகின்றன. தெற்கு முகமாய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பங்கஜவல்லிக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பாசம் அங்குசத்தையும், கீழிரு கரங்களில் அபய வரத ஹஸ்தமும் தாங்கியிருக்கிறார். இவருக்கு அருகில் விநாயகருக்கு தனி சந்நிதியும் உள்ளது.

குருந்த மரத்தடியில் இருப்பதால் குருந்தமரத்தடியீஸ்வர் என்னும் சந்நிதியில் லிங்கமும் நந்தியும், கோயிலின் பின்புறத்தில் விஸ்வரூபத்தை நந்தவனத்தில் தரிசிக்கலாம். சுமார் ஐம்பதுஅடி உயரம் கொண்ட சிவன் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்யும் சுதைச் சிற்பம் உள்ளது

பிரகாரத்தில் சத்தியநாராயண பெருமாள் அருகே தலவிருட்சம் புரச மரமும் அதற்கு கீழே கங்கா தீர்த்தமும் இருக்கின்றன. அரை ஏக்கரில் பெரிய குளம் இருக்கிறது. பாணலிங்கம் நவகிரக சந்நிதி, வள்ளலார், பாலசுப்ரமணியர் சந்நிதி, பூண்டி வெண்பாக்கம் கோயிலின் ஊன்றீஸ்வரர்}மின்னொளி நாயகி, உச்சிஷ்ட கணபதி, ஆறுமுகம், துர்க்கை, பைரவர், கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நாராயணன் ,பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர்.

"இங்கு வழிபட்டால் பிரச்னைகள், நோய்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வியாபாரம் விருத்தியடையும். குடும்ப நலம் சிறக்கும்' என்பது ஐதீகம்.

அன்று புரசு மரக்காடாய் இருந்த பகுதி, இன்று புரசைவாக்கம் என்ற பெயரோடு சென்னையின் மத்தியில் இருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பஞ்சபூதத் தலங்களில் நீருக்கு உரிய தலமாக, "அப்பு தலம்' என குறிக்கப்படுகிறது.

கோயில் திருப்பணி செய்யப்பட்டு, நவம்பர் 28}இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மணமும், பேறும் அருளும் சிவன்!

காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, கி.பி. மூன்றாம்} ஏழாம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பல்லவர்கள், சோழர்கள் காலங்களில் கோயில்கள் பல எழுப்பப்பட்டன. அந்த வகையில் விஜயாலய சோழன் காலத்தைய கோயிலாக, மணிமங்... மேலும் பார்க்க

பெருந்தமிழன் பூதத்தாழ்வார்

தமிழ்நாட்டில் 1,300 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் சிறப்பை எடுத்துக் கூறும் கலைக்கூடமாக மாமல்லபுரம் விளங்குகிறது. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதங்கள், கடற்கரைக் கோயில், சிற்பங்கள... மேலும் பார்க்க

நலம் அளிக்கும் நகரீசுவரர்

"கல்வியில் கரையில்லாத காஞ்சி மாநகர்' எனப் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்களில் ஒன்று நகரீசுவரர் கோயிலாகும். கருவறையில் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்புரிகின்றா... மேலும் பார்க்க

மிளகைப் பயறாக்கிய திருப்பயத்தங்குடி நாதர்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரும், நாகப்பட்டினமும் புகழ்பெற்ற துறைமுகங்களாகும். இங்கு அரபு நாடுகளிலிருந்து பாய்மரக் கப்பல்களில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு, அதற்கு ஈடாக மிளகு ஏற்றுமதி செய்... மேலும் பார்க்க

நிதமும் அருளும் நித்ய சுமங்கலி மாரியம்மன்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான "வல்வில் ஓரி' கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலம். இராசையம்பதி, இராஜபுரம் என்றெல்லாம் முன்பு அழைக்கப்பட்ட ராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை... மேலும் பார்க்க