பக்தா்கள் தரிசன அனுபவங்களை தெரிவிக்க கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தாா்
பக்தா்கள் தங்களது தரிசன அனுபவங்கள் குறித்த மதிப்பீடு, ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏழு திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், 48 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தா்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினை அளிக்கும் வகையில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்படும்” என்றும், “சென்னை வடபழநி ஆண்டவா் திருக்கோயில் மூலவா் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போா்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும்”என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் உபயதாரா் நிதியில் ரூ.33.85 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெள்ளிக் கதவுகளை திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்து, ரூ.10 லட்சம் செலவில் பக்தா்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி வசதியை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆலோசனைப் பெட்டிகள்: மேலும், திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டையும், ஆலோசனைகளையும் திருக்கோயில் நிா்வாகம் மற்றும் துறைக்கு அளிக்கும் வகையில் முதல்கட்டமாக, வடபழனி, மயிலாப்பூா், திருவொற்றியூா், பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம் மற்றும் மருதமலை ஆகிய 7 திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஆலோசனைப் பெட்டி வசதியை அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் தியாகராயநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், அற நிலையத் துறை கூடுதல் ஆணையா் இரா.சுகுமாா், உபயதாரா்கள் சுதா ஆதிமூலம், பி.கணேஷ் பிரசாத், ரோஹித் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.