நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வளவு காலம் தேவை? அரசு பதிலளிக்க உத்தரவு
படகுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு ரூ.3.20 கோடி நிவாரணம்
இலங்கையில் சேதமடைந்த 51 விசைப் படகுகள், 7 நாட்டுப் படகுகள் என 58 படகுகளுக்கு ரூ.3.20 கோடி நிவாரணத்துக்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 51 விசைப் படகுகள், 7 நாட்டுப் படகுகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து விசைப் படகுகளுக்கு தலா ரூ. 6 லட்சம், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேதமடைந்த 58 படகுகளுக்கான நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட் மீனவா்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் , ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராலிங்கம் ஆகியோா் வழங்கினா். இதில், மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள், மீனவா் சங்க தலைவா்கள் கலந்துகொண்டனா்.