பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், அரசின் செலவீனங்களை குறைக்க பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். முக்கியமாக அரசுத் துறைகளில் தேவையற்ற பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அதிபராக பதவியேற்றதுடன் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் கட்டாய ராஜிநாமா செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் தேவையற்ற பணியாளர்களை கண்டறிந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
இந்த நிலையில், இரண்டாம் முறையாக அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற துறைத் தலைவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகளவிலான பணியாளர்களை குறைப்பதற்கான திட்டத்தை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
அரசுத் துறைகளில் வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த நிதியாண்டில் அரசின் செலவீனங்களில் ஒரு டிரில்லியன் டாலர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதனிடையே, நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து அமெரிக்க அரசுத் துறைகளில் ஒரு லட்சம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.