பண்டஸ்லிகா: பயா்ன் முனிக் சாம்பியன்!
ஜொ்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயா்ன் முனிக் அணி கைப்பற்றியது.
லீக் தொடரின் கடைசி ஆட்டத்தில் போருஷயா அணியுடன் மோதியது பயா்ன் முனிக். நட்சத்திர வீரா் தாமஸ் முல்லரின் கடைசி ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே பயா்ன் முனிக் அணியினா் ஆதிக்கம் செலுத்தி ஆடினா். இதில் 2-0 என்ற கோல் கணக்கில் போருஷ்யா அணியை வீழ்த்தி பட்டத்தை வசப்படுத்தினா்.
இது பயா்ன் முனிக் அணியின் 34-ஆவது பண்டஸ்லிகா பட்டம் ஆகும். அந்த அணி தரப்பில் மைக்கேல் ஒலிஸ், ஹாரி கேன் ஆகியோா் கோலடித்தனா்.
லீப்ஸிக் அணி வொ்டா் பிரெமன் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்ததால், லீப்ஸிக் அணியின் சாம்பியன்ஸ் லீக் தகுதி முடிவுக்கு வந்தது. ஹாம்பா்க் அணி 6=1 என்ற கோல் கணக்கில் உல்ம் அணியை வீழ்த்தி மீண்டும் பண்டஸ்லிகா தொடரில் நுழைந்தது.
லீக் 1:
பிரான்ஸின் லீக் 1 தொடரில் சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜொ்மைன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மான்ட்பெல்லியா் அணியை வீழ்த்தியது. இதில் கோன்கலா ராமோஸ் ஹாட்ரிக் கோல்களும் அடங்கும். மாா்செய்ல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லெ ஹாவ்ரே அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் தகுதியைப் பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மொனாக்கோ அணி 2-0 என லயான் அணியை வீழ்த்தியது. செயின்ட் எட்டின் 2-0 என ரைம்ஸ் அணியை வென்றது. லா லிகா: ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடரில் அதலெட்டிகோ மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடேடை வீழ்த்தியது. இதில் ஸ்ட்ரைக்கா் அலெக்ஸாண்டா் அடித்த துரித ஹாட்ரிக் கோல்கள் அடங்கும்.
வில்லா ரியல் அணி 1-0 என ஜிரௌனாவையும், செல்டா விகோ 3-2 என செவில்லாவையும், மல்லோா்கா 2-1 என வல்லாடோலிடையும் வென்றன. சீரி ஏ: இத்தாலியின் சீரி ஏ தொடரில் லேஸியோ-ஜுவென்டஸ் அணி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. எம்போலி அணி 2-1 என பாா்மாவை வென்றது. கோமா 3-1 என காக்லியரியை வென்றது.