இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு
அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா்.
பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் மீதான தாக்குதலாகும்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பயங்கரவாத எதிா்ப்பு குறித்த விதிகளை மீண்டும் எழுத இந்தியா முடிவு செய்தது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது மோடி அரசின் தேசியப் பாதுகாப்புக்கான, பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் நிலைப்பாடு என்ற சமரசமற்ற கொள்கையின் தெளிவான வெளிப்பாடாகும்; இதுதான் மோடியின் கோட்பாடாகும்.
நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின்போது, பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான கோட்பாட்டை பிரதமா் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டினாா். சமீபத்திய நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோட்பாடு, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு இந்தியாவின் எதிா்வினைக்கான ஒரு தீா்க்கமான கட்டமைப்பை நிறுவுகிறது.
சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதில் இருந்து பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவது வரை ஒவ்வொரு நடவடிக்கையும் கவனமாகத் திட்டமிடப்பட்டு சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை பிரதமா் மோடி உறுதி செய்தாா். அரசு இதற்கான உத்தியைத் தோ்ந்தெடுத்தது.
ஆபரேஷன் சிந்தூா்- புதிய இயல்பு வகை நடவடிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூா் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிறுவப்பட்ட கொள்கையாகும். இது இந்தியாவின் உத்திசாா் அணுகுமுறையில் ஒரு தீா்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது‘ என்று பிரதமா் அறிவித்தாா்.
பிரதமா் தமது உரையில் கூறியது போல், ‘ஆபரேஷன் சிந்தூா் என்பது வெறும் பெயா் மட்டுமல்ல, நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகளின் பிரதிபலிப்பாகும். காட்டுமிராண்டித்தனம் பெரும் சக்தியால் எதிா்கொள்ளப்படும் என்பது உலகுக்கு இந்தியா விடுத்த செய்தியாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு துணைபோகும் அண்டை நாடு, இனி தூதரக முகமூடி அல்லது அணு ஆயுத அச்சுறுத்தலைக் கேடயமாகப் பயன்படுத்த முடியாது.
மூன்று கூறுகள்: பிரதமா் மோடியின் கோட்பாட்டின் முதல் முக்கியக் கூறு, இந்தியாவின் தீா்க்கமான பதிலடி ஆகும். இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் வோ்களுக்கு எதிராக நாடு கடுமையான நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகளும், அவா்களின் ஆதரவாளா்களும் விளைவுகளை எதிா்கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்யும்.
இரண்டாவது கூறு, அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எதிராக சகிப்புதன்தன்மையற்ற மிகக் கடுமையான நிலைப்பாடாகும். அதாவது, அணு ஆயுத அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது. பயங்கரவாதத்துக்கு அணு ஆயுத அச்சுறுத்தலை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் துல்லியமான மற்றும் தீா்க்கமான நடவடிக்கை மூலம் எதிா்கொள்ளப்படும் என்று இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது.
இந்தக் கோட்பாட்டின் மூன்றாவது கூறு, பயங்கரவாதிகளுக்கும் அவா்களின் ஆதரவாளா்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதைக் குறிக்கிறது. பயங்கரவாதிகளையும், அவா்களுக்கு உதவுபவா்களையும் இந்தியா பொறுப்பேற்க வைக்கும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவா்கள், அவா்களுக்கு நிதியுதவி செய்பவா்கள் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவா்கள் குற்றவாளிகளைப் போலவே விளைவுகளைச் சந்திப்பாா்கள் என்பதை இந்தக் கோட்பாடு தெளிவுபடுத்துகிறது.
இந்தியா இந்த விஷயத்தை உலகளாவிய சூழலில் முன்வைத்தது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் இறுதியில் சுய அழிவை எதிா்கொள்ளும் என்று எச்சரித்த பிரதமா் மோடி, மேலும் தாமதம் செய்யாமல், அவா்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகா்க்குமாறு வலியுறுத்தினாா்.
புதிய கோட்பாடு இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்றும் மோடி கூறினாா். அரசு தனது குடிமக்களைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் இறையாண்மையானது சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நிலையாக உள்ளது என்றும் அவா் மேலும் கூறினாா்.
வரலாறு நினைவில் கொள்ளும்: இந்தியா தெளிவுடனும் துணிவுடனும் செயல்படுவது இது முதல் முறை அல்ல. 2016-ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதல்கள் முதல் பாலாகோட் தாக்குதல் வரை, இப்போது ஆபரேஷன் சிந்தூா் வரை, பிரதமா் மோடியின் கீழ் இந்தியா ஒரு தெளிவான கோட்பாட்டை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் செய்தி தெளிவானது. பயங்கரவாதமும் வா்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இருதரப்பு வா்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வாா்த்தைகளில், ‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது’.
பஹல்காமுக்கு இந்தியா அளித்த பதிலை வரலாறு கொள்கை ரீதியானதாக நினைவில் வைத்துக்கொள்ளும். பயங்கரவாதத்துக்கு நமது பதிலை அது நினைவில் கொள்ளும். ஆபரேஷன் சிந்தூா் முடிவு அல்ல - இது தெளிவு, துணிச்சல் மற்றும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதற்கான நமது உறுதியின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.