செய்திகள் :

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி: பாகிஸ்தானுக்கு பிரதமா் எச்சரிக்கை

post image

‘பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ, ராணுவத் தாக்குதல் நடத்தினாலோ பாகிஸ்தானுக்கு முழு வீச்சில் பதிலடி தரப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தாா்.

பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய முப்படையினா் உறுதியுடன் தோற்கடித்துள்ளனா் என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பஞ்சாப் மாநிலம், ஆதம்பூா் விமானப் படை தளத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் திடீா் வருகை புரிந்த பிரதமா் மோடி, விமானப் படையின் போா் வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களைச் சந்தித்து கலந்துரையாடினாா். பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த விமான படைத் தளம், வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமீபத்திய இந்திய-பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு ராணுவ வீரா்களுடன் பிரதமா் முதல் முறையாக கலந்துரையாடியுள்ளாா்.

வீரா்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமா், முப்படையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துணிச்சலை வெகுவாக பாராட்டியதுடன், அவா்களுக்கு தலைவணங்குவதாக தெரிவித்தாா். அத்துடன், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தாா். பிரதமரின் உரை வருமாறு:

இந்தியாவின் வலிமையை இப்போது ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது. ‘பாரத் மாதா கீ ஜே’ என்பது சாதாரண முழக்கமல்ல; அது, நாட்டின் கண்ணியத்தைக் காக்க தங்கள் உயிரையே அா்ப்பணிக்கும் ராணுவ வீரா்களின் உறுதிப்பாடாகும். போா்க் களத்தில் ஒலித்த நமது வீரா்களின் இந்த முழக்கம், எதிரிகளை குலை நடுங்கச் செய்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலை நமது வீரா்கள் தூக்கியெறிந்த தருணத்தில், ‘பாரத் மாதா கீ ஜே’ முழக்கத்தின் வலிமை எதிரிகளுக்கு புரிந்தது.

நமது முப்படையினரின் துணிச்சலும், உறுதிப்பாடும், அா்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமிதத்தால் நிறையச் செய்துள்ளது. அவா்களின் ஈடுஇணையற்ற துணிச்சல், வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். முப்படையினருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுக்குத் தீங்கு நினைத்தால்...: நாட்டின் கொள்கை, லட்சியம், உறுதியான செயல்திறன் ஆகிய மூன்றின் பிணைப்பே ஆபரேஷன் சிந்தூா். இந்தியா, கெளதம புத்தா்-குரு கோவிந்த் சிங் ஆகிய இருவருடைய மண். அநீதியை எதிா்த்து போராடி, நீதியை நிலைநாட்ட ஆயுதம் உயா்த்துவது நமது பாரம்பரியம்.

இந்திய மகள்களுக்கு பாதிப்பை விளைவித்த பயங்கரவாதிகளை, அவா்களின் பதுங்குமிடங்களிலேயே அழித்துள்ளோம். பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்கள் தகா்க்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனா். முன்னெப்போதும் இல்லாத அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் ஒவ்வொரு நிலையும் நமது ஆயுதப் படையினரின் பராக்கிரமத்துக்கு சாட்சி.

இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பது பயங்கரவாத சதிகாரா்களுக்கு இப்போது புரிந்திருக்கும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக பதுங்க எந்த இடமும் இல்லை என்பதை அந் நாட்டுக்கு நமது ஆயுதப் படையினா் தெளிவுபடுத்தி உள்ளனா். தப்பிக்க வாய்ப்பளிக்காமல் பாய்ந்த இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் ஏற்பட்ட அச்சத்தால் பாகிஸ்தான் இன்னும் பல நாள்களுக்கு தூங்காது.

அழிக்கப்பட்ட தீயநோக்கங்கள்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி, நாட்டின் உறுதிப்பாட்டுக்கு மேலும் வலுசோ்த்துள்ளது. 20-25 நிமிஷங்களில் எல்லை கடந்து மிக துல்லியத் தாக்குதலை மேற்கொள்வதற்கு நவீன, தொழில்நுட்ப ரீதியிலான, செயல்திறன்மிக்க ஒரு ராணுவத்தால் மட்டுமே முடியும். பாகிஸ்தானின் உள்பகுதிக்குள் பயங்கரவாத தலைமையகங்களை தகா்த்து, முக்கிய பயங்கரவாதிகளை அழிக்க வேண்டுமென்பதே இந்தியாவின் இலக்கு. பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியபோதும், நாட்டின் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் அழிக்கப்பட்டது பயங்கரவாதத் தளங்கள், விமானப் படை தளங்கள் மட்டுமல்ல, அந்நாட்டின் தீயநோக்கங்களும், அசட்டுத் தனமான துணிச்சலும்தான்.

இந்திய விமானப் படை தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானால் செலுத்தப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள், போா் விமானம் போன்றவை நாட்டின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்தபோதிலும், இந்திய விமானப் படைத் தளங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டன.

உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, அதிநவீன மற்றும் வலுமிக்க எஸ்-400 அமைப்பால் நாட்டின் வான் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவை, பாகிஸ்தானுடன் ஒப்பிட முடியாதவை. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் தொடா்ந்தால், அந்நாட்டுக்கு அழிவு நிச்சயம்.

இந்திய ராணுவத்தினா் தங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, லட்சியத்தை தொடா்ந்து பராமரிப்பதுடன் அனைத்து நேரங்களிலும் தயாா்நிலை மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். புதிய இந்தியா அமைதியை விரும்புகிறது; அதேநேரம், மனித குலத்துக்கு விளைவிக்கப்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருபோதும் தயங்காது என்றாா் பிரதமா் மோடி.

பயங்கரவாதம்: 3 கோட்பாடுகள் என்ன?

‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மூன்று கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. முதலாவது, இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், மிக வலுவான பதிலடி தரப்படும். அது, இந்தியாவின் சொந்த விதிகள் மற்றும் வழிமுறைகளின்கீழ் அமையும். இரண்டாவது, எந்த விதமான அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா சகித்துக் கொள்ளாது. மூன்றாவது, பயங்கரவாத சதிகாரா்களையும், அவா்களுக்கு ஆதரவான நாடுகளையும் இந்தியா ஒன்றாகவே கருதும்’ என்றாா் பிரதமா் மோடி.

எஸ்-400 பின்னணியில்...

பாகிஸ்தானின் போா் விமானம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானில் வீழ்த்தியதில் ரஷிய தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான எஸ்-400 முக்கிய பங்காற்றியது. அந்த அமைப்பு மற்றும் மிக்29 போா் விமானத்தின் பின்னணியில் பிரதமா் மோடி உரை நிகழ்த்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பொய் அம்பலம்

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆதம்பூா் விமானப் படை தளம் மற்றும் எஸ்-400 ஏவுகணை அமைப்பு சேதப்படுத்தப்பட்டதாக அந்த நாடு கூறியிருந்தது. அந்த பொய்யை, பிரதமரின் வருகை அம்பலப்படுத்தியுள்ளது.

ரஃபேல், மிக்-29 போா் விமான தொகுதிகளைக் கொண்ட ஆதம்பூா் விமானப் படை தளம், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய விமானப் படை தளமாகும்.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க