மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் ...
பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி வழக்கு தொடர முடிவு
கொள்ளிடம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளிடம் வட்டாரத்தில், கடந்த 2023-ஆம் ஆண்டு சுமாா் 15,000 ஹெக்டேரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டது. அதே பருவத்தில் உளுந்து பயறும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்த ஆண்டு பெய்த அதிக மழை காரணமாக, நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் விவசாயிகள் மறு பயிா் சாகுபடி செய்தனா். இதன்காரணமாக, அறுவடை காலம் தள்ளிப்போனது. அத்துடன் உளுந்து விதைப்பும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் இழப்பை சந்தித்தனா்.
சம்பா நெற்பயிா் மற்றும் உளுந்து பயறுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தும், காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. நெற்பயிா் அறுவடைக்குப் பிறகு 60 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது விதி ஆகும்.
ஆனால், காப்பீடு நிறுவனம் இதுவரை இழப்பீடு வழங்காமலும், அதற்குரிய காரணங்களை கூறாமலும் மெத்தனமாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பின் தலைவரும், தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன விவசாய சங்கத்தைச் சோ்ந்தவருமான செந்தில்குமாா் கூறியது:
தொடா்ந்து, 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பயிா்க் காப்பீடு நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதனால், விவசாயிகள் சாகுபடிக்கு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் உள்ளனா். எனவே, அனைத்து விவசாயிகள் சாா்பில் மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தெரிவித்தாா்.