மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயி...
பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!
பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அன்று மதியம் ஆடுகளை எண்ணிய போது மேய்ச்சலுக்கு விட்டிருந்த 5 ஆட்டு குட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஆடுகள் காணாமல் போனது குறித்து சரசு புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் ஆடு திருட்டு குறித்து விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையின் போது, ஆடுகளுடன் ஒரு கார் மானாமதுரை நோக்கி செல்வதாக போலீஸாருக்கு தெரியவந்தது.


இது குறித்து மானாமதுரை போலீஸாருக்கு எமனேஸ்வரம் போலீஸார் தகவல் கொடுத்தனர். உடனடியாக மானாமதுரை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவர் சிலை அருகே வந்த கார் ஒன்றில் இருந்து இறங்கிய இருவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை கண்ட போலீஸார் அவர்களை விரட்டி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி அய்யனார் நகரை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அவரது மனைவி முத்துமாரி என்றும், காரில் வந்து ஆடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருட்டு போன ஆடுகளை மீட்ட போலீஸார், ஆடு திருட பயன்படுத்திய கார் மற்றும் காளீஸ்வரன் தம்பதியிரை எமனேஸ்வரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆடு திருட்டில் ஈடுபட்ட இந்த தம்பதியினர் மீது ஏற்கனவே சில ஆடு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கணவனும் மனைவியும் சேர்ந்து காரில் வந்து ஆடு திருடிய சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


















