செய்திகள் :

`பல்’லேக்கா - தொடர்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

பல் மருத்துவமனையின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன். 

ஒரு பெரிய அறையை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். அந்தத் தடுப்பினை ஒட்டி அழகான சோபா, காக்கியா? கறுப்பா? என குழப்பும் இரு சேர்கள், கவிழ்த்து வைக்கப்பட்ட மினிரல் வாட்டர் பாட்டில் மற்றும் முட்டைக்கண் திருஷ்டி பொம்மை. இதுதான் மருத்துவமனையின் மொத்த உருவம்.

எனக்குப் பின்னால் இருந்த டாக்டரின் அறை கூட  திறந்து தான் இருந்தது. எட்டிப்பார்க்க வேண்டும் என்ற தானூந்தலில் ஒரு முறை எட்டிப்பார்த்தேன். சலூனில் இருக்கும் சாய்வு நாற்காலியைப் போல ஒரு சுழல் நாற்காலி.  சலூனில் இருப்பது போலவே கும்பலான சிறு ஆயுதங்கள். சலூன் போலவே பல் சிகிச்சை அறையிலும் கண்ணாடி தான் பிரதானமாக இருந்தது.

சித்தரிப்புப் படம்

இப்படி ஒப்பீடு செய்வதால் பல் வலி ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை என்பதால் அமைதியாக உட்கார்ந்தேன்.

மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தத் திருஷ்டி பொம்மை என்னைக் குறுகுறுவெனப் பார்ப்பதான உணர்வு. அதன் பற்கள் கொஞ்சம் நீண்டு அழகில்லாமல் இருந்தன. ஒரு பல் டாக்டருக்கு அசிங்கமான பல் தான் திருஷ்டி கழிக்கிறது.

பொதுவாக மாந்திரிகப் பொம்மைகளைக் கண்டால் தான் எல்லோருக்கும் பயம் வரும். அதுவும் அந்த மாந்திரிகக் கோடாங்கிகளிடம் எனக்குத் தனிப் பயம். பாழடைந்த குட்டிச்சுவரின் மீதமர்ந்து  கால்களை ஆட்டிக்கொண்டு உடுக்கை அடிக்கும் கோடாங்கியை அறிவீர்களா? எனக்கு இப்படியான கனவுகள் அடிக்கடி வருவதுண்டு.

இந்தத் திருஷ்டி பொம்மை அந்தளவுக்குப் பயம்தரவில்லை. ஆனால், அதன் கீழே ” நான் நீயல்ல” என்ற வாசகம் என்னைக் கவர்ந்தது. வேறு ஏதுமில்லை.

சில மருத்துவமனைகளில் நோயின் அறிகுறிகள் என அட்டைகள் தொங்கும். அறிகுறிகளைப் படிக்கப்படிக்கவே நமக்குள் இனம்புரியாத பயம் வந்து ஒற்றிக்கொள்ளும். காரணம், முக்கால்வாசி அறிகுறிகள் நம்மிடம் இருக்கும். அதுவும் மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் உறுதி . மீதி ஒரு சதவீதம் இதைப் படிப்பதற்காக உயிர் வாழ்ந்தது போல இருக்கும். உண்மையாகப் பயந்துபோய் பல நாள்கள் இசிஜி எடுக்க நானாகவே போய் படுத்துபாடாய்ப் படுத்தி எடுத்திருக்கிறேன்.

சித்தரிப்புப் படம்

ஆனால் எந்தப் பல் மருத்துவமனையிலும் பயமுறுத்தும் வகையில் எந்த அறிவிப்பும் இருப்பதில்லை. எல்லாம் அழகாகவே இருக்கும். டாக்டரும் தான். காரணம் பல் மருத்துவர்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதில்லை. அன்றையதினற்கான வரும்படியோடு தனது வியாபாரத்தை முடித்துக்கொள்ளும் ஒரு கீரை வியாபாரியின் சாயல் தான். பிறகு குடும்பத்தோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்.

இதற்கு முன்னால் நான் பல் சிகிச்சைக்குச் சென்ற மருத்துவரே சான்று. வாய் கொப்புளிக்கச் சொல்லி விட்டு தம் அடிக்கச் சென்றுவிடுவார். நோயாளியின் புகைச்சல் அவரின் புகையை ஒன்றும் செய்து விடவில்லை. மிகமிக எளிதாக வாழ்க்கையை ஊதித் தள்ளுகிறார் அவ்வளவு தான்.

”சார்…பிரஸர் செக் செய்யலாம்” என்றார் நர்ஸ்.

நம்மை வசீகரிக்கும் எல்லாவற்றிற்கும் மனதிற்குள் ஒரு செல்லப்பெயர் வந்து தங்கி விடும்.

அவள் டிஜிட்டல் மானிடரைத் தூக்கி மேசைமீது வைக்கும்முன், அவளுக்கு “மெல்லிசை” எனப்பெயர் வைத்தேன்.

பேரு?

சொன்னேன்.

சிரித்தார்.

என் பெயரைக்கேட்டதும் சிரிக்கும் ஆயிரத்தெட்டாவது ஆள் மெல்லிசை.

 வகுப்பில் அட்டன்டென்ஸ் பெயர் கூப்பிடும்போது சிரிப்பார்கள். பரீட்சை பேப்பர் கொடுக்க அழைக்கும் போதும் சிரிப்பார்கள், என் பெயர் வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பார்கள். பரீட்சைப் பேப்பர் வாங்கும் போது இனம்புரியாத பயம் வருமே.

வயசு?

அந்த ஒற்றைக் கேள்வியில் மிதமான சூடு இருந்தது.

இதெல்லாம் நர்ஸ்களின் அதிகாரம் அல்லவா?

ஓரிரு வார்த்தைகளில் பதிலளி என்பது கேள்விகளுக்கான லட்சணங்களில் ஒன்று. பக்கம்பக்கமாக விடை எழுதினாலும் பாஸாக  ஒரு மார்க் வேண்டி  டீச்சர்களிடம் அடம்பிடிப்பிடிக்கும் ரகம் நான். ஒற்றைவரி பதில்கள் எப்போதும் எனக்கு பரீட்சயமானது இல்லை! பிடிபடாது. எனவே மெல்லிசையின் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்கத் திணறிப்போனேன்.

”ஆ…”என்றார்.

வலி தரும் இடத்தில் மருந்து நனைத்த பஞ்சினை வைத்தார். பிரச்சனைக்குரிய இடங்களில் சமாதானப்புறா பஞ்சு தான், இதமாக இருந்தது.

பல்லை ஆட்டினீங்களா?

இல்லை.

டோக்கன் நெம்பர்  மூணு. போய் உட்காருங்க…கூப்பிடுவாங்க.

பல்லை ஆட்டும் வயதா? என்ன கேள்வியிது. ஆனால் கேட்டது மெல்லிசை என்பதால் மெதுவாகச் சிரித்தேன்.

ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பில் பல்லை ஆட்டி பிடுங்குவதில் எங்களுக்குள் ஒரு  போட்டியே நடக்கும்.  அப்போது முன் பல்லை ஆட்டிப்பிடிங்கியதோடு சரி, இப்போதெல்லாம் பல்லைத்தொட்டாலே சுர்ரென்று வலி தலைக்கேறுகிறது.

சித்தரிப்புப் படம்

இன்றைய வலி கூட தீபாவளி அன்று முறுக்கை மெனக்கெட்டு மென்றதன் பின்விளைவு தான். காரமடை முறுக்கு புகழ்பெற்றது. காரமடையிலிருந்து கொண்டு முறுக்கு கடிக்காமல் இருந்தால் எப்படி? தீபாவளி முறுக்கு என்பது எங்கள் வீட்டில் வெறும் பலகாரம் அல்ல. அதொரு பரம்பரை தீனி.

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே முறுக்கு சுடுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும். அட்டாலியிருக்கும் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக உயிர் பெறும். அவை கீழே இறங்கி அதன் மாட்சிமையை நிலைநிறுத்தும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவரை மதுரையே சாமியாடும். இங்கும் அவை மீண்டும் அட்டாலி ஏறும் வரை அடுப்பாங்கரையில் அவற்றின் ராஜ்ஜியம் தான். இட்லிச் சட்டியும், தோசைக்கல்லும் பரிதவித்து நிற்பார்கள்.

வடச்சட்டியின் அகலவாய் மூடாது;மனம் வேறெங்கும் அகலாது.

முறுக்கு சுற்றும் போது வீட்டையே சுற்றிவருவது இன்று நேற்றல்ல. அது 90 கிட்ஸ்களின் ஆதர்சம். தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளியில் நடக்கும் முறுக்கு பரிமாற்றம் 90 கிட்ஸ் பதின்பருவத்திற்கான மனப்பதிவுகளில்  என்றென்றும் அழியாதது. இந்த முறுக்கு பரிமாற்ற வைபோகம் இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் கூட நடக்காது.

 பத்தாம் வகுப்பு படிக்கும் போது அன்றொரு மெல்லிசை  கடைசி நாளில் பிரிவு என்று கூட அறியாமல் கடைசி வரை மறக்கமாட்டேன் என  சத்தியம் செய்தாள். இதை  எந்தக் கடவுளும் கண்டுக்கவே இல்லை.  நினைவுகளை அள்ளி அணைக்கும் அந்த உறவுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவே இல்லை. ஆனால், அந்த மெல்லிசை கைக்குட்டையில் கட்டவிழ்த்துக் கொடுத்த  நொறுங்கிய முறுக்குகளின் சுவை இனி நா பொழுதும்  கண்டிராது. இது தான் என்னை முறுக்குச் சாப்பிட அலைக்கழித்தது.

விளைவு? நீண்ட நாட்களாக விழச் சாக்காடுத் தேடிக்கொண்டிருந்த கடைவாய்ப் பல்லொன்று சிறிய எலும்புத்துண்டால் அடிப்பட்டுத் தள்ளாடுகிறது. லேசான ரத்தக்கசிவு. இந்த ஹாஸ்பிடல் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது.

இந்தக் கசிவெல்லாம் அன்று இல்லை. பள்ளி காலை இடைவேளையில் பல்லை ஆட்டத்தொடங்கினால் சாயங்காலம்  மணியடிக்கும்போது ”சாமி சத்தியமாக” கையோடு பல் வந்து விடும். பல் விழுவது பெரியவனாகும் பிரமோஷன். ஆகவே, வீடுவரும் வழியெல்லாம் அதை ஆராதித்து நகர்ந்த நாட்கள் கனாகாலம்.

வீட்டில் வந்து அம்மாவிடம் பத்திரமாகத் தருவேன். இல்லையென்றால் அம்மா வருத்தப்படுவாள். அதை வாங்கி சாணத்திற்குள் வைத்து ஏதேதோ மந்திரங்கள் சொல்லி தலையைச்சுற்றி குடிசை வீட்டின் மீது வீசுவாள். சாணத்துக்குள் வைத்தால் புதுப் பல் உரம்போட்டது போல வளரும் என்பது அவளது  நம்பிக்கை.

பாட்டி செல்லம்மாளும் சளைத்தவள் அல்ல. எனது இன்னொரு  பல்லை அம்மா சொல்லியும் கேளாமல் எறும்புப் புற்று மீது எறிந்தாள். எறும்பு புற்று வளர்வதுபோல புதிய பல்லும் விரைவில் வளரும் என நம்பினாள்.

இப்படியெல்லாம் வளர்த்தப் பல் இப்படி வலிக்குதே எனத் தலை குனிந்தேன்.

-தொடரும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

குட்டி குரங்கு - சிறார் சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 2 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மாறனின் மகிழினி! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க