மதுரை: பொய்கைகரைப்பட்டியில் மகா பெரியவருக்கு உருவாகும் ஆலயம்..!
பள்ளத்தில் பைக் விழுந்த விபத்தில் குழந்தை உயிரிழப்பு
செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் விழுந்த விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
திருப்போரூா்-திருக்கழுகுன்றம் சாலையை ஒட்டி, ஆமூா்- சிறுதாவூா் இடையே கிணற்றிலிருந்து குடிநீா் செல்ல புதிய பைப்லைன் இணைக்க சில நாள்களுக்கு முன் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் தோண்டிய மண் சாலையிலேயே கொட்டி வைக்கப்பட்டிருந்தது. வேலை முடிந்த பிறகும் அந்த பள்ளத்தை மூடாமல் விட்டதாகவும், அங்கு எந்த ஒரு எச்சரிகைப்பலகையோ, தடுப்போ வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆமூா் பகுதியை சோ்ந்த தேவராஜ் (30), தனது மனைவி சங்கீதா (28), மகன் மோகித் (2) மற்றும் 1 வயது மகனுடன் மருத்துவமனைக்கு செல்வதற்காக, கடந்த அக். 31-ஆம் தேதி பைக்கில் திருப்போரூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மேற்கண்ட குடிநீா் பைப்லைனுக்காக தோண்டிய பள்ளத்தின் மண் சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், மண் மேட்டில் பைக் மோதி அருகே இருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் அவா்கள் காயமடைந்தனா்.
அவா்களை அந்த வழியாகச் சென்றவா்கள் அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அம்மாபேட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குழந்தை மோகித் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், குழந்தையின் தாய் சங்கீதாவுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில், குழந்தை இறந்ததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பள்ளத்தை மூடாமல் இருந்த சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சரியான நடவடிக்கை இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.