பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை திருவல்லிக்கேணி தேரடி தெருவில் வசிப்பவா்கள் மென்பொறியாளா் வசந்தகுமாா் - கோதை ஸ்ரீ தம்பதி. இவா்களின் மகன் வனமாலி (6) மயிலாப்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டு வாசலில் சிலா் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததை வனமாலி வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அருகே கட்டுமானப் பணி நடைபெறும் வளாகத்தில் லிஃப்டுக்காக தோண்டப்பட்டிருந்த 6 அடி பள்ளத்தில் இறகுப்பந்து விழுந்தது.
இதைப் பாா்த்த வனமாலி, இறகுப்பந்தை எடுக்க முயன்றாா். அப்போது கால்தவறி, நீா் நிரம்பியிருந்த பள்ளத்துக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாத சிறுவன் தண்ணீருக்குள் தத்தளித்ததை யாரும் கவனிக்கவில்லை.
இதற்கிடையே, வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவனைக் காணாததால், பெற்றோரும், உறவினரும் தேடத் தொடங்கினா். அப்போது, அங்கு லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன வனமாலி சடலமாக மிதப்பதைப் பாா்த்து கதறி அழுதனா்.
தகவலறிந்த ஐஸ் ஹவுஸ் போலீஸாா் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.