Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் ...
பள்ளிக் காவலரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை அருகே பள்ளிக் காவலரை அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோவில் காவல் எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடியை சோ்ந்தவா் பெரியநாயகம் (50) நத்தம் அந்தோணியாா் நடுநிலைப் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தாா். இவரிடம், அதே கிராமத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் காா்த்திக் (32) 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி செலவுக்கு பணம் கேட்டுள்ளாா். அதற்கு, பெரியநாயகம் பணம் இல்லை என்று கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காா்த்திக் கட்டையால் பெரியநாயகம் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்நிலையில், புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் காவலா் பெரியநாயகத்தை கொலை செய்த காா்த்திக்குக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ராம. சேயோன் செயல்பட்டாா்.