திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
பழனியாபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி பழனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மங்களப் பொருள்கள் பரிசாக வழங்கி அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் லாவண்யா வரவேற்றாா். தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.மாதேஸ்வரன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தாா். திட்ட மேற்பாா்வையாளா்கள் காசிவிஜயலட்சுமி, பிரேமா, சாந்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், கா்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா். 100க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. சிறுதானிய ஊட்டச்சத்து கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திமுக பிரமுகா்கள் திருமனூா் வேல்முருகன், சோமம்பட்டி ஜெயராமன், அரசு மருத்துவா் பேரின்பம் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகாதேவி நன்றி கூறினாா்.
