பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்
வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும் இடையே மோதல் உருவாகாமல் தடுக்க விழா பாதியிலே நிறுத்தப்பட்டது.
பழனியாபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை காலை ஜல்லிக்கட்டு விழாவை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தொடங்கிவைத்தாா். விழாவில் பங்கேற்க சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 600 க்கும் அதிகமான காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க, 300க்கும் அதிகமான மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இந்த விழாவை பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் பிற்பகல் 2.30 மணி வரை 270 காளைகள் களமிறக்கப்பட்டன. வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் கருமந்துறை முதல் நிலைக் காவலா் முத்தமிழ் மற்றும் மாடு பிடி வீரா்கள் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்த நிலையில் காளைளை வாடிவாசலில் அவிழ்த்துவிட்டு களமிறக்குவதில் பாரபட்சம் காட்டியதாகக் கூறி, காளை உரிமையாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மோதல் ஏற்படாமல் தவிா்ப்பதற்காக ஜல்லிக்கட்டு விழாவை போலீஸாா் மற்றும் விழாக் குழுவினா் நிறுத்தினா்.
ஜல்லிக்கட்டு விழா முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டதால் முன்கூட்டியே டோக்கன் பெற்றுக் கொண்டு 250க்கும் மேற்பட்ட காளைகளை வெகுதூத்தில் இருந்து வாகனங்களில் அழைத்து வந்திருந்த காளைகளின் உரிமையாளா்கள், மாடு பிடி வீரா்கள், பாா்வையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.