மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
அப்போது, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீா்மானத்தை நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றுவோம். அவா்கள் (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவா்களின் தளங்களை வைத்திருக்கிறாா்கள். பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் கலந்துகொள்வதை ஒட்டுமொத்த தேசமும் பாா்த்திருக்கிறது. அத்தகைய நாட்டை நாம் எப்படி நம்புவது?
அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் அழுத்தத்தின் பேரில் போா் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதால், பாஜக அரசு போா் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
நம் ராணுவம் வலுவாக பதிலளித்தது. ஆனால், பின்னா் நாம் போா் நிறுத்தத்தை அறிவித்தோம்.
பேச்சுவாா்த்தைகளில் மத்தியஸ்தம் செய்ததாகவும், வா்த்தக குறைப்பை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் டிரம்ப் கூறினாா். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஏப்ரல் 22 அன்று நம் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் எங்கே? என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினாா்.
இருப்பினும், விவாதங்களில் வா்த்தக அச்சுறுத்தல்கள் இருந்ததாகக் கூறப்படுவதை அரசுத் தரப்பு வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவா்களுக்கு இடையிலான பேச்சுவாா்த்தைகளின்போது வா்த்தகம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை’ என்றாா் அந்த அதிகாரி கூறினாா்.
முன்னாள் தில்லி முதல்வா் அதிஷியும் நீதி நிலைநாட்டப்பட்டதா என்று ஆச்சரியம் எழுப்பும் வகையில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளாா்.
எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூா்’ நமது படைகளின் துணிச்சலைக் காட்டியது. ஆனால், மே 10 அன்று டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, அரசாங்கம் போா் நிறுத்தத்தை உறுதி செய்தது. பஹல்காம் பயங்கரவாதிகள் பிடிபட்டாா்களா? சிந்தூருக்கான பழிவாங்கல் எடுக்கப்பட்டதா? என்பதை நாடு அறிய விரும்புகிறது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், மத்திய அரசு தனது தோ்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. அதாவது, 2024 மக்களவைத் தோ்தலின்போது, மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ஆறு மாதங்களுக்குள் திரும்பப் பெறப்படும் என்று பாஜக தலைமை உறுதியளித்திருந்தது.
ஆறு மாதங்கள் கடந்துவிட்டன, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்குப் பதிலாக, நம் படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
‘ட்ரூத் சோஷியலில்’ டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ஆச்சரியமான பதிவிற்குப் பிறகு போா் நிறுத்த அறிவிப்பு வந்தது. அந்தப் பதிவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ததாக பெருமையுடன் அவா் கூறினாா்.
‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவா் பதிவிட்டிருந்தாா்.