பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது.
வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் களமிறங்கினர். அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சைம் ஆயுப் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஃபகர் ஸமான் சிறப்பாக விளையாட மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது பாகிஸ்தான்.
முகமது ஹாரிஸ் (4 ரன்கள்), கேப்டன் சல்மான் அகா (3 ரன்கள்), ஹாசன் நவாஸ் (0 ரன்), முகமது நவாஸ் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே நன்றாக விளையாடிய ஃபகர் ஸமான் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதிக்கட்டத்தில் குல்தில் ஷா 18 ரன்களும், அப்பாஸ் அஃப்ரிடி 22 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹிதி ஹாசன் மற்றும் தன்சிம் ஹாசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரரான பர்வேஷ் ஹொசைன் இமோன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தௌகித் ஹிரிடாய் 36 ரன்களும், ஜேக்கர் அலி 15 ரன்களும் எடுத்தனர்.
A clinical chase!
— Bangladesh Cricket (@BCBtigers) July 20, 2025
Bangladesh sealed the victory by 7 wickets and took the lead in the series!
Dutch-Bangla Bank Bangladesh Pakistan T20I Series 2025 | 1st T20I #BCB#Cricket#BANvPAK#BDCricket#LiveCricket#Bangladesh#HomeSeriespic.twitter.com/fbvI0ugH5u
பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 2 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய பர்வேஷ் ஹொசைன் இமோனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!
Bangladesh won the first T20I against Pakistan by 7 wickets.