'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.
43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச் செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதை ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், எடை மிகுந்த செயற்கைக்கோள்களை ஃப்ரென்ச் கயானா நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால் இப்போது, எடைமிகுந்த செயற்கைக்கோளையும் தங்களால் ஏவ முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கும் வகையில், 4,400 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இவ்வளவு எடைகொண்ட செயற்கைகோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை. 1,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
அதன் மூலம், இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும்.
அதற்கு ஏற்ப, இந்த செயற்கைக்கோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறியதாவது:
“4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட், தகவல் தொடர்பு செயற்கைக்கோளை தேவையான சுற்றுப்பாதையில் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் செலுத்தியுள்ளது.

மிகவும் மதிப்புமிக்க சந்திரயான்-3 தேசத்திற்கு பெருமை சேர்த்தது. இப்போது மற்றொரு பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. 100 சதவீத வெற்றி விகிதத்தைக் காட்டுகிறது.
இந்த செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது “ஆத்மநிர்பர் பாரத்” (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) என்பதற்கான மற்றொரு பிரகாசமான எடுத்துக்காட்டு. வானிலை ஒத்துழைக்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடினமான சூழலை எதிர்கொண்டனர். ஆனாலும், அவர்களின் கடின உழைப்பு வெற்றியை உறுதி செய்துள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
















