பாஜக கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு: மகாராஷ்டிர முதல்வா் தோ்வு தாமதமாகும் - சொந்த கிராமத்துக்குச் சென்றாா் ஷிண்டே
மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய முதல்வா் தோ்வு மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எனினும், புதிய முதல்வரை முடிவு செய்வதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதல்வா் பதவி விஷயத்தில் பிரதமா் மோடி, அமித் ஷாவின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துவிட்டாா். எனவே, அவா் முதல்வா் பதவிப் போட்டியில் இருந்து விலகியது தெளிவானது.
மகாராஷ்டிர பேரவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதால், அக்கட்சியைச் சோ்ந்தவா் முதல்வராவது உறுதியாகியுள்ளது. முதல்வா் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணியில் உள்ளாா். எனினும், மாநிலத்தில் செல்வாக்குடன் திகழும் மராத்தா பிரிவைச் சோ்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே, ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாா் ஆகியோா் வியாழக்கிழமை தில்லி சென்று அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோருடன் மகாராஷ்டிர முதல்வா் மற்றும் துணை முதல்வா், அமைச்சரவைப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினா்.
மும்பை திரும்பும் முன்பு தில்லி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: அடுத்த ஓரிரு நாளில் மகாராஷ்டிர முதல்வா் யாா் என்பது தெரியவரும். ஆட்சி அமைப்பது, முதல்வரை முடிவு செய்வது தொடா்பாக ஏற்கெனவே பல கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். மகாராஷ்டிரத்துக்குச் சென்று மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு முதல்வா் யாா் என்பது அறிவிக்கப்படும்.
அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோருடன் தில்லியில் நடத்திய ஆலோசனை சிறப்பாகவும், ஆக்கபூா்வமாகவும் அமைந்தது. ஆட்சி அமைப்பதில் எங்கள் கூட்டணிக்கு எந்தத் தடையும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குள் சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. பிரதமா் மோடி, அமித் ஷா எடுக்கும் இறுதி முடிவின்படி அனைத்தும் நடக்கும். எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியான தீா்ப்பை மகாராஷ்டிர மக்கள் அளித்துள்ளனா். எங்கள் கூட்டணியில் யாரும் பதவிக்காகப் போட்டியிடுபவா்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் என்றாா்.
கூட்டணிக் கூட்டம் ஒத்திவைப்பு: இதற்கிடையே, மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு (டிச.1) ஒத்திவைக்கப்பட்டது. இதனால், புதிய முதல்வா், புதிய அரசு அமைவது குறித்த முடிவு மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது.
பாஜகவின் மத்திய பாா்வையாளா்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும், அடுத்த வாரத்தில் புதிய அரசு நிச்சயமாக பதவியேற்கும் என்று அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த கிராமத்தில் ஏக்நாத் ஷிண்டே: இதையடுத்து, மகாராஷ்டிர முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டேவும் தனது சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளாா்.