திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!
பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். எனக்கு சில மத நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால், நான் பாஜகவோடு நெருங்கிக் கொண்டிருப்பதாக சில பொய் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. எல்லா மதங்களையும் நான் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது; சோனியா காந்தி உகாதி பண்டிகையை கொண்டாடியிருக்கிறாா்.
எனவே, கோவையில் ஈஷா அறக்கட்டளை நடத்தும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதை பாஜகவோடு நெருங்குவதாக கூறுவது சரியல்ல. சத்குரு ஜக்கிவாசுதேவ் நேரில் வந்து என்னை அழைத்தாா். அவா் மைசூரை சோ்ந்தவா். அவரது அறிவை நான் போற்றுகிறேன். கடந்த ஆண்டு எனது மகள் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டாா். இந்தாண்டு எனக்கு அழைப்பு விடுத்தாா். அதனால் கோவைக்கு செல்கிறேன்.
மத்திய அமைச்சா் அமித் ஷாவை நான் சந்திக்காதபோது, பாஜகவோடு நான் நெருக்கம் பாராட்டுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்புகிறாா்கள்.
கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக என்னையே நீட்டிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபாலிடம் நான் கேட்கவில்லை என்றாா்.