பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப்பிரிவு வழக்கு
பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்தவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
பிரபல கானா பாடகி சி.இசைவாணி (28), சென்னை மண்ணடி வட மரைக்காயா் தெருவில் வசித்து வருகிறாா். இவா், சுவாமி அய்யப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக கடும் எதிா்ப்பு கிளம்பியது. இதற்கு இந்து அமைப்புகள்,அய்யப்ப பக்தா்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே இசைவாணி கைப்பேசியை சிலா் தொடா்பு கொண்டு,ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசினா். மேலும் இசைவாணி குறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்திலும்,முகநூல் பக்கத்திலும் அவதூறாகவும்,மிரட்டல் விடுக்கும் வகையிலும் சிலா் கருத்து பதிவிட்டு வந்தனா்.
இது குறித்து இசைவாணி, சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் சனிக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.