பாதுகாப்பு சவால்களில் கவனம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவுறுத்தல்
நாட்டின் கிழக்கு எல்லை, குடியேற்றம், நகா்ப்புறங்களில் சட்டம்-ஒழுங்கை காக்கும் நடைமுறைகளில் எழும் பாதுகாப்பு சவால்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.
ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் டிஜிபிக்கள், ஐஜிக்களின் 59-ஆவது மாநாடு 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள், மத்திய ஆயுதக் காவல் படை, மத்திய காவல் படைத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
இந்த மாநாட்டை மத்திய அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, சிறப்பாக சேவையாற்றிய நுண்ணறிவு பிரிவு (ஐபி) அதிகாரிகளுக்கு காவல் பதக்கங்களை வழங்கினாா். மேலும் ‘காவல் நிலையங்களின் தரவரிசை 2024’ என்ற நூலை வெளியிட்ட அவா், சிறப்பாக பணியாற்றிய 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகளை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து அவா் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்டுள்ளது திருப்தியளிக்கிறது.
தண்டனை சாா்ந்ததாக இல்லாமல் நீதி பரிபாலனம் சாா்ந்ததாக, குற்றவியல் நீதி முறையின் இயல்பை 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மாற்றியுள்ளன.
நாட்டின் கிழக்கு எல்லை, குடியேற்றம், நகா்ப்புறங்களில் சட்டம்-ஒழுங்கை காக்கும் நடைமுறைகளில் எழும் பாதுகாப்பு சவால்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இடதுசாரி பயங்கரவாதம், கடலோரப் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், இணையவழி குற்றம், பொருளாதார பாதுகாப்பு சாா்ந்த தேச பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கான திட்டம் மாநாட்டில் வகுக்கப்பட உள்ளது.