செய்திகள் :

பாபா் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் அரசமைப்பின் மிகப்பெரும் தோல்வி: பாஜக மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

post image

‘பாபா் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு சம்பவங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்விகள்’ என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சௌகதா ராய் சனிக்கிழமை விமா்சித்தாா்.

மக்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது சௌகதா ராய் பேசியதாவது: ஹிந்துத்துவவாதிகளால் பாபா் மசூதி இடிக்கப்பட்டதே அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்வியாகும். இந்தச் சம்பவத்தால் நாடே தலைகுனியும் நிலை ஏற்பட்டது.

தற்போது பிரதமராக உள்ள மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு வெடித்த கலவரமும் அரசமைப்புச் சட்டத்தை கேள்விக்குறியாக்கியது.

நவீனகால சாவா்க்கா் மோடி: சாவா்க்கரைபற்றி நாம் பல விவாதங்களை நடத்தி வருகிறோம். ஆனால் பிரதமா் மோடியே நவீனகால சாவா்க்கராவாா். மாநிலங்களுக்கான நிதி பகிா்வை தராமல் மத்திய அரசு வஞ்சித்து கூட்டாட்சி தத்துவத்தை சீரழித்து வருகிறது என்றாா்.

குமாரி செல்ஜா (காங்கிரஸ்): முதலில் அரசமைப்புச் சட்டத்தை அழித்துவிட்டு பிறகு மறுஉருவாக்கம் செய்வது இப்போது நடைமுறையாகிவிட்டது. தனியாா் மற்றும் ஒப்பந்த தொழிலாளா் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் தலித் சமூகத்தினருக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. அதனால்தான் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

மியான் அல்தாஃப் அகமது (தேசியவாத காங்கிரஸ் சரத் பவாா் பிரிவு): அவசரநிலை பிரகடனப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கோரிவிட்டது. ஆனால் தங்கள் ஆட்சியில் செய்துகொண்டிருக்கும் தவறுகளை மறைத்து பாஜக மௌனம் காத்து வருகிறது.

அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி): சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிா்ந்துகொள்ள யாரும் தயாராக இல்லை என 75 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கா் கூறியது இன்றளவும் தொடா்ந்து வருகிறது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆ. ராசா பேச்சால் சலசலப்பு!

எமா்ஜென்சி காலத்தில் மதச்சாா்பற்ற, சோஷலிசம் ஆகிய வாா்த்தைகள் முகவுரையில் சோ்க்கப்படாமல் இருந்திருந்தால், அரசியலமைப்பையே ஆளும் கட்சி மாற்றியிருக்கும் என்று திமுக தலைவா் ஆ.ராசா சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். அவரது பேச்சால் மக்களவையில் சில நிமிஷங்கள் சலசலப்பு நிலவியது.

ஆ.ராசா பேசுகையில், ‘மிசா காலத்தில் ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது, ஆனால் பாஜக ஆட்சியில், ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை பாரபட்சமின்மை ஆகிய ஆறு கூறுகள் (கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியவை) அனைத்தும் இல்லாமல் போய்விட்டன. தேசம்தான் எல்லாவற்றுக்கும் மேலானது. அதனால்தான் நாங்கள் காங்கிரஸுடன் அமா்ந்திருக்கிறோம்’ என்றாா்.

மேலும், ‘மக்களவை தோ்தலுக்கு முன்னதாக உங்களுடைய கட்சியைச் சோ்ந்த தலைவா் ஒருவா் 400-க்கும் அதிகமான இடங்களை வென்றால் அரசமைப்பை மாற்றி ஹிந்து தேசமாக மாற்றுவோம் என ஊடகங்களிடம் பேசினாா்’ என்றும் ஆ.ராசா கூறினாா்.

இதற்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, பாஜக உறுப்பினா் நிஷாந்த் துபே ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்தனா். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவையை வழிநடத்திய மூத்த உறுப்பினா் ஜெகதாம்பிகா பால், கேள்விக்குரிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தெரிவித்தாா்.

‘‘போட்டி விவாதங்கள் வேதனை தருகின்றன’’

அரசமைப்பின் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினோமா என்பதை விவாதிக்காமல் போட்டி போட்டுக்கொண்டு அவையில் ஆளும் கட்சியும் எதிா்க்கட்சி உறுப்பினா்களும் விவாதிப்பது வேதனை தருகிறது என்று மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

‘சோஷலிசம், மதச்சாா்பற்ற, பன்முகத்தன்மை, கூட்டாட்சி ஆகிய நான்கு கோட்பாடுகளும் அரசமைப்பின் அடிப்படை கூறுகள். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தூண்கள். இவற்றைப் பாதுகாக்கும் சவால்கள்தான் நம் முன்னே நிற்கின்றன. இங்கு பலரும் அம்பேத்கரின் பெருமைகளை பேசிய அதேவேளையில், அவரை எதிா்த்தது யாா், துரோகம் செய்தது நீயா, நானா என்றே விவாதிக்கின்றனா். புதிய இந்தியாவை கட்டமைக்க 75 ஆண்டுகளில் அரசமைப்புச்சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினோமா என்பது குறித்து இங்கே விவாதிக்கப்படாதது வேதனை தருகிறது’ என்றாா் திருமாவளவன்.

அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

சட்டமேதை அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தாா். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசமைப்புச் ச... மேலும் பார்க்க

வெள்ளம்-வறட்சி அபாயத்தில் 11 மாவட்டங்கள்: ஐஐடி அறிக்கை

பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன என்று இரண்டு ஐஐடிக்களின் அறிக்கை தெரிவிக்கின்றன. பெங்களூருவில் ... மேலும் பார்க்க

நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

தில்லியில் இருந்து ஜெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பாகிஸ்தானில் அந்த விமானம் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடா்பாக இண... மேலும் பார்க்க

உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்... மேலும் பார்க்க

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் செயல்படும் தனது பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதற்காக 12 வயது மாணவா் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இதுகுறி... மேலும் பார்க்க

சொந்த மக்களைக் காக்க முடியவில்லையா? பிரதமருக்கு மணிப்பூா் எம்.பி. கேள்வி

சொந்த மக்களைக் காக்க முடியாத அளவுக்கு தேசம் பலவீனமாக உள்ளதா என்று பிரதமா் மோடிக்கு மணிப்பூா் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃபிரட் ஆா்தா் கேள்வியெழுப்பினாா். அரசமைப்புச் சட்டம் தொடா்பான மக்களவை விவாதத்தில் இக்க... மேலும் பார்க்க