பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு
பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் பாறைக்குழி உள்ளது. இங்கு மாநகராட்சி கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், மாநகராட்சி கழிவுகள் தொடா்ந்து கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குப்பை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாநகாட்சி நிா்வாகத்தினா், கொட்டப்பட்டுள்ள குப்பை மீது உடனடியாக மண்ணைக் கொட்டி சமன் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.