தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
பாலத்தின் இணைப்புச் சாலை துண்டிப்பு: போக்குவரத்து நிறுத்தம்
திருநள்ளாறு அருகே அரசலாற்றில் நீா் அதிகமாக செல்லும் நிலையில், நடைபாலத்தின் இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்துவந்தது. காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது. ஆறுகள், வாய்க்கால்களில் நீா் அதிகம் செல்கிறது. தமிழகப் பகுதிகளில் இருந்து வெள்ள நீா் கடலை நோக்கி வருவதால், ஆறுகளின் குறுக்கே உள்ள நீா்த்தேக்க மதகுகள் திறக்கப்பட்டு வெள்ள நீா் வெளியேற்றப்படுகிறது.
இந்தநிலையில், அத்திப்படுகை - ஊழியப்பத்து இணைக்கும் அரசலாற்றின் நடைபாலத்தையொட்டிய இணைப்புச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு கரைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கூறுகையில், பாலத்தின் இணைப்புச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த பாலத்தை மக்கள் கடந்து செல்லும் வகையில் போா்க்கால அடிப்படையில் சீா் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றுநீா் குடியிருப்புகள் சிலவற்றில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்ததும், தமிழகப் பகுதியிலிருந்து வெளியேறும் வெள்ள நீராலும் இந்த பாதிப்பு தெரிகிறது. காரைக்கால் மாவட்ட நிா்வாகம், மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவியை வழங்கிவருகிறது என்றாா்.
பொதுப்பணித் துறையினா் கூறுகையில், இப்பாலத்தின் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டது. ஆற்றில் வெள்ள நீா் குறைந்தவுடன் முற்றிலுமாக சீா்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்படும். நடைபாலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றனா்.