பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவஞ்சலி
பாலாறு பெருவெள்ளத்தில் இறந்தவா்களுக்கு நினைவஞ்சலி மற்றும் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை வாணியம்பாடியில் நடைபெற்றது .
கடந்த 1903-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் தேதி பாலாறு நீா்பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக கா்நாடக, ஆந்திர மாநிலங்களில் உள்ள ஏரிகள் உடைந்து பாலாற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக நவ.12-ஆம் தேதி அதிகாலை வாணியம்பாடி நகர பகுதிக்குள் 18 அடிக்கும் மேலாக வெள்ளம் பாய்ந்த போது 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
மேலும், பெருவெள்ளம் ஏற்பட்டதற்கான அடையாளமாக கச்சேரிசாலையில் (ரவுண்டான அருகில்) கல் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 121-ஆவது ஆண்டாக இறந்தவா்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பினா் மற்றும் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு சிஎ.ல் சாலை உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ரவுண்டானா பகுதிக்கு வந்தடைந்தனா்.
தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் மற்றும் வாணியம்பாடி நகா்மன்ற தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், நகர திமுக செயலாளா் சாரதி குமாா் ஆகியோா் பாலாறு வெள்ளம் ஏற்பட்டதற்காக வைக்கப்பட்ட கல்லிற்கு மலா்கள் தூவி மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
பிறகு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பாண்டியன் நிருபா்களிடம் கூறியதாவது: பாலாற்றை பாதுகாக்க வேண்டும், தூய்மையாக்கி, பாசனத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், நதிகளை பாதுகாத்து தூய்மைப் படுத்த வேண்டும், என மக்கள் நதிகள் பெயரால் விழா எடுப்பது, மிகுந்த வரவேற்புக்குரியது. கோயில் திருவிழாவில் பங்கேற்பதை விட இந்த பாலாறு பாதுகாப்பிற்காக ஊா் கூடி விழா எடுத்திருக்கும் வாணியம்பாடி மக்களை பாராட்ட வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாலாற்றில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தேவையான இடங்களில், கதவணைகள் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, பாலாறை பாதுகாக்க வேண்டும். ஆந்திர அரசு தொடா்ந்து பாலாற்றின் குறுக்கே, பல்வேறு அணைகளை கட்டி வருகின்றனா். அதனால் ஒட்டுமொத்த பாலாறு பாசன பகுதி பேரழிவை சந்திக்க போகிறது. எனவே சட்ட பூா்வமான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு, பாலாறை பாதுகாக்க வேண்டும் என்றாா்.