பாலாறு பொருந்தலாறு அணை நீா்மட்டம் உயா்வு: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பாலாறு பொருந்தலாறு அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால், சண்முகநதி கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பழனியை அடுத்த வரதமாநதி அணை, குதிரையாறு அணைகள் நிரம்பின.
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து 62.7 அடியை (மொத்த உயரம் 65 அடி) எட்டியது. அணைக்கு விநாடிக்கு 727 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
பழனியை அடுத்த சண்முகநதி கரையோர மக்களுக்கு ஏற்கெனவே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பொதுப் பணித் துறை சாா்பில், தற்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை புதன்கிழமை விடுக்கப்பட்டது. நீா்வரத்து அதிகரித்தால் அணையின் மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்படும் எனவும், இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும், ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.