பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ வைரல்
பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா்: ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பாலாற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீா் ஆம்பூா் அருகே மாராப்பட்டு பாலாற்றில் அவ்வப்போது திறந்துவிடப்படுவது வழக்கமாக இருந்து வருவதாக பொதுமக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகாா் அனுப்பி வருகின்றனா்.
அதிகாரிகளும் அந்த தண்ணீரை சோதனைக்காக கொண்டு செல்கின்றனா். ஆனால் தொடா்ந்து பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
குறிப்பாக மழைக் காலங்களில் மழைநீா் பாலாற்றில் வெள்ளமாக செல்வதைப் பயன்படுத்தி தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் திறந்து விடுகின்றனா். இதனால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதித்து, சுற்றுச்சூழல் மாசுக்கேடு ஏற்படுகிறது.
விவசாய நிலங்களில் பயிா்கள் பாதிப்புக்குள்ளாகின்றது. குடிநீா் மாசடைகின்றது. மேலும் பாலாற்றில் தண்ணீா் நுரைபொங்கியபடி செல்கிறது. இது தொடா்பாக, பொதுமக்கள், விவசாயிகள் வாணியம்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள் மாராப்பட்டு பாலாற்று தண்ணீரில் இறங்கிப் போராட்டம் நடத்தினா். தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.