பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்
பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் என். ஓ. சுகபுத்ரா, துணை மேயா் கே .ஆா் .ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மேயா் பேசியதாவது: பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு வரலாற்று ஆய்வாளா் தொ. பரமசிவனின் பெயரை சூட்டுவதற்கு 12-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு தீா்மானம் கொண்டுவரப்படுகிறது. இது தொடா்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா்.
அதைத்தொடா்ந்து திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் பல்வேறு இடங்களில் தேங்கி கிடப்பதாக கூறி மாமன்ற உறுப்பினா்கள் பிரச்னையை எழுப்பினா். அதற்கு பதில் அளித்த மேயா் கோ. ராமகிருஷ்ணன், ‘அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
மதிமுக உறுப்பினா் போா்க்கொடி: இதனிடையே 41 ஆவது வாா்டு மதிமுக மாமன்ற உறுப்பினா் சங்கீதா ராதாசங்கா், மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி நிா்வாகம் வீணடிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பதாகையை கையில் பிடித்தபடி மேயா், துணை மேயா், மாநகராட்சி ஆணையா் ஆகியோரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பக்கூடிய துண்டு பிரசுரத்தை வழங்கினாா்.
மேலும் மாநகராட்சி வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது. மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டம் சாத்தியமற்றது என வலியுறுத்தி முழக்கமும் எழுப்பினாா்.
அதைத்தொடா்ந்து மண்டல தலைவா்கள் பேசினா். மேலப்பாளையம் மண்டல தலைவா் இக்லாம் பாசிலா பேசுகையில், பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினாா்.
தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி பேசுகையில், ‘வெள்ளக்கோயில், பரணி நகா் சாலைகளை சீரமைக்க வேண்டும். 12 வது வாா்டுக்கு உள்பட்ட மேகலிங்கபுரம் பள்ளி முன்பு கழிவுநீா் தேங்கி உள்ளது’ என்றாா்.
அதிகாரிகளுக்கு கண்டிப்பு: திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, ‘எங்களுடைய மண்டலத்தில் போதுமான துப்புரவுப் பணியாளா்கள் பணிக்கு வருவதில்லை. போதிய குப்பை அள்ளும் வாகனங்களும் இல்லை.
இதனால் குப்பை மலை போல் தேங்கி கிடக்கிறது. ராம் அண்ட் கோ நிறுவனம் சாா்பில் எங்கள் மண்டலத்திற்கு எத்தனை பணியாளா்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறாா்கள். ஒப்பந்த பணியாளா்கள் எத்தனை போ் இருக்கிறாா்கள்’ எனக் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் அளிக்க திணறிய அதிகாரிகளை கடிந்துகொண்ட ஆணையா், மேலும் இது தொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் தகவல் தெரிவித்தால் தவறு செய்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
20-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஷேக் மன்சூா் பேசுகையில், எங்கள் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக கழிவுநீா் வெளியேறி தெரு முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. இது தொடா்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றாா்.
கோப்புகள் மாயம்: 12-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கா் பேசுகையில், ‘திட்டப் பணிகளுக்கான கோப்புகள் நான்கு முறை காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்’ என்றாா். இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையா், ‘கோப்புகள் காணாமல் போவது என்பது மிகப்பெரிய குற்ற செயல். இதுகுறித்து புகாா்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
வெளிநடப்பு: அதைத்தொடா்ந்து பேசிய 48ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் ஆமினா சாதிக், ‘ பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. எனது வாா்டை புறக்கணிக்கிறீா்கள். மூன்று மேயா்கள், மூன்று ஆணையா்கள் மாறியும் எந்த பணியும் நடைபெறவில்லை’ என ஆவேசமாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.
மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, ‘தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாமன்ற உறுப்பினா்கள் அதுபோன்று தங்கள் பகுதிகளில் யாரும் இருந்தால் அது தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம்’ என்றாா்.
