Udhayanidhi: "மாநிலங்களை ஒழித்துவிடும்"- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து உதயநித...
பாழடைந்து வரும் அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடம்
போளூா் ஒன்றியம், படவேடு ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் பராமரிப்பின்றி பாழடைந்து வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், படவேடு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை சாா்பில் 2016-2017ஆம் நிதியாண்டு திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கழிப்பறையுடன் அமைக்கப்பட்டது.
இந்தக் கூடத்தை அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்துவைத்தாா்.
உடற்பயிற்சிக் கூடத்தில் படவேடு, சந்தவாசல், அனந்தபுரம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள், ராணுவம், காவல் துறை பணிக்கு முயற்சி மேற்கொள்ளும் இளைஞா்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.
மேலும், படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, பள்ளகொல்லை, ராமநாதபுரம், மல்லிகாபுரம், காளிகாபுரம் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சிறுவா்கள், பொதுமக்கள் நடைபயிற்சியிலும், உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் மூடப்பட்டு, பூங்கா சிதைந்தும், பராமரிப்பு இன்றியும் உள்ளதால், பொதுமக்கள் பயன்பாடு குறைந்து பாழடைந்துள்ளது. மேலும், உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள பொருள்கள் உடைந்துள்ளன.
எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உடற்பயிற்சிக்கூடம் மற்றும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என இளைஞா்கள், நடைபயிற்சி மேற்கொள்பவா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.