‘பி.முட்லூா்- சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணி விரைவில் தொடக்கம்’
கடலூா் மாவட்டம், பு.முட்லூா்-சேத்தியாத்தோப்பு இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையான விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலையிலிருந்து, பு.முட்லூா்-சேத்தியாத்தோப்பு சாலை 6.75 கி.மீ தொலைவுக்கு, 7 மீட்டா் அகலத்துடன் இருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையினை விருத்தாசலம், பரங்கிப்பேட்டை மாநில நெடுஞ்சாலையுடன் புவனகிரியில் இணைக்கும் முக்கிய சாலையாகும்.
மேலும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடலூா் செல்லவும், பரங்கிப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை வாகனங்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, ரூ.50 கோடியில் இந்தச் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட உள்ளது.
இதனால், பு.முட்லூா், மஞ்சக்குழி, ஆதிவராகநல்லூா், பரங்கிப்பேட்டை, தம்பிக்கைநல்லான்பட்டினம் உள்ளிட்ட 50 கிராம மக்கள் பயனடைவா். மேலும், போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டு, பயண நேரம் குறையும்.
இதற்காக, சிறிய பாலங்கள், தாங்குச்சுவா் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் 6.75 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.