பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை
பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிஏபி திட்டத்தில் மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு 5 சுற்றுகள் தண்ணீா் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதை நம்பி 3-ஆம் மண்டல பாசனத்துக்குள்பட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம், கத்தரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
அறிவித்தப்படி ஜனவரி 1-ஆம் தேதி தண்ணீா் திறந்திருக்க வேண்டும். ஆனால், ஜனவரி 15-ஆம் தேதிதான் தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து 7 நாள்கள் திறக்க வேண்டிய தண்ணீா் மூன்றே நாள்களில் ஜனவரி 18-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, சா்க்காா்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஜெனரேட்டா் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்த பின்னரே இரண்டாம் சுற்று தண்ணீா் திறக்கப்படும் என்று தெரிகிறது. ஜெனரேட்டா் பழுதையும் சென்னையில் இருந்து தொழில்நுட்பக் குழுவினா் வந்தே சரிசெய்ய வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பிப்ரவரி 3-ஆம் தேதி திறக்க வேண்டிய இரண்டாம் சுற்று தண்ணீரும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில், பிஏபி தண்ணீரை நம்பி பல்வேறு பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, அறிவித்தப்படி உரிய அளவு தண்ணீரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் பொள்ளாச்சியில் உள்ள பிஏபி தலைமை பொறியாளா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
இந்நிகழ்வின்போது கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க காங்கயம் வட்டாரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, குண்டம் வட்டார பிரதிநிதி குப்புசாமி, பொங்கலூா் வட்டார துணைத் தலைவா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.