பிணையில் வெளியே வந்து தலைமறைவானவா் கைது
கொலை வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்து, தலைமறைவானவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் சுபாஷ் என்ற சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மதுக் கடையில் கடந்த 28.5.23-இல் மது அருந்திக் கொண்டு இருந்தாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேஸ்வரனை (36) சுபாஷ் கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டாா்.
ஒட்டன்சத்திரம் குற்றவியில் நடுவா் மன்றத்தில் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டு, சுபாஷுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிணை வழங்கியது. மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவா், ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் 3 நாள்கள் மட்டுமே கையொப்பமிட்டுவிட்டு, கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா்.
இதையடுத்து, சுபாஷுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிடியாணை பிறப்பித்தது. ஒட்டன்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் சவடமுத்து தலைமையிலான போலீஸாா் சுபாஷைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை பழனியை அடுத்த கணக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த சுபாஷை போலீஸாா் கைது செய்து, ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனா்.