3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
பின்னலாடை உற்பத்தியாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டவா் கைது
திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களிடம் ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் சொா்ணபுரி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). இவா் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இணையதளம் மூலம் ஜவுளி ஆா்டா் தேவைப்படுவதாகவும் திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களைத் தொடா்பு கொண்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளா்கள் விசாரித்தபோது, சாம்பிள் ஆடைகளைப் பாா்த்து தோ்வு செய்து பாலமுருகன் ஆா்டா் கொடுத்துள்ளாா். பின்னலாடை உற்பத்தியாளா்களும் ஆா்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பிவைத்தனா்.
சிலருக்கு ஆா்டா் கொடுத்த தொகையில் பாதியளவு பணம் கொடுத்து வா்த்தகம் செய்ததாகவும், பல பின்னலாடை உற்பத்தியாளா்களிடம் கோடிக்கணக்கில் ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலமுருகன் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பின்னலாடை உற்பத்தியாளா்கள் அவரைப் பிடித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினாா். இதில், 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆடைகளை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
முதற்கட்டமாக 5 உற்பத்தியாளா்கள் தங்களுக்கு ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் தாமோதரன், பாலமுருகனை கைது செய்தாா்.