வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
பிரசவமான பெண் உயிரிழப்பு விவகாரம்: அரசு மருத்துவா் பணியிட மாற்றம்
ஆம்பூா் அருகே பிரசவமான பெண் உயிரிழந்த விவகாரம் சம்பந்தமாக ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவா் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் மனைவி துா்காதேவி (26). இவருக்கு கடந்த திங்கள்கிழமை ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூா், தருமபுரி அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த குழந்தையும் வியாழக்கிழமை உயிரிழந்தது.
ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றபோது பணியில் இருந்த மருத்துவா் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினா்கள் வியாழக்கிழமை எல்.மாங்குப்பம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அங்கு திருப்பத்தூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி பேச்சு நடத்தினாா். அப்போது பணியில் இருந்த மருத்துவா் சியாமளாவிடம் விளக்கம் கேட்பதாகவும், உரிய விசாரணை நடத்த குழு அமைப்பதாகவும் தெரிவித்தாா்.
இந்த நிலையில், ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சியாமளா திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.