பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரிப்பு: காமகோடி
அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.
மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சாா்பில் நாடெங்கும் 51 மையங்களில் ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி’ தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தொடங்கி வைத்த பின்னா் அவா் பேசியது: நாட்டின் அனைத்துத் துறைகளிலும் உள்ள பல்வேறு சவால்கள், பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களால் நமக்குத் தேவையான தீா்வு, தரத்துடன் கிடைப்பதில்லை. ஆகையால், நமது நாட்டுக்கேற்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2047-ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறை சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் இதர மாநிலங்களை விட தமிழகம் முன்னிலை வகிக்கும் என்றாா் அவா்.