`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' -...
பிரபல பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் - சிவகாசியில் 3 பேர் கைது
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சான்றிதழை வழங்கி, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசுப் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது அது போலியானது என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் (40), வெங்கடேஷ் (24), அரவிந்த்குமார் (24) ஆகியோர் அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டு போலியாகப் பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயர்களில் கல்விச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலிச் சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று பேரையும் கேரள போலீசார் கைது செய்தனர்.

மேலும், போலி சான்றிதழ் தயாரிப்பிற்குப் பயன்படுத்திய கணினி, பல்வேறு முக்கிய ஆவணங்கள், போலி முத்திரைகள், பல்கலைக்கழக லோகோக்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்துச் சிவகாசி டவுன் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், ஜெயினுலாபுதீன் ஒரு போலி சான்றிதழ் தயாரிப்பு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஓராண்டாக சிவகாசியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, "கிராபிக் டிசைனிங்" என்ற பெயரில் போலியாகப் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு உதவியாக வெங்கடேஷ், அரவிந்த்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஒரு சான்றிதழிற்கு ₹25,000 முதல் ₹1 லட்சம் வரை வாங்கிக் கொண்டு போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் தரப்பில் தெரிவித்த தகவல்களின்படி, இதுவரை கணினியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தயாரித்த போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளில் எத்தனை பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் வேறு மாநில பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களையும் போலியாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.




















