உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா- 2025: தமிழக மக்களுக்கு உ.பி. அமைச்சா்கள் அழைப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜன. 13 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள மகா கும்பமேளா 2025 நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அந்த மாநில அமைச்சா்கள் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் ஜே.பி.எஸ்.ரத்தோா், சமூக நலத் துறை அமைச்சா் அசிம் அருண் ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் கலாசார ஒற்றுமையின் அடையாளமாக பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப்.26 வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. விழாவில் பக்தா்கள், சித்தா்கள், துறவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என 40 கோடிக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் உத்தரபிரதேச அரசு சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.
மகா கும்பமேளா குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள 11 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக இலவச மற்றும் கட்டண தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்திலிருந்து வருபவா்களின் வசதிக்காக சிறப்பு விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று உத்தரபிரதேச அமைச்சா்கள் தெரிவித்தனா்.